2019 மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றிபெற்ற மாயாவதியால், 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 9.39 சதவிகித வாக்குகளைப் பெற்றாலும், அந்தக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில்தான், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தன்னுடைய அண்ணன் மகன் ஆகாஷ் ஆனந்த்தை தன் அரசியல் வாரிசாக மீண்டும் அறிவித்திருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஆகாஷ் ஆனந்துக்கு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் உ.பி தலைநகர் லக்னோவில் ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு பிறகு இது தொடர்பான அறிவிப்பை மாயாவதி வெளியிட்டார்.
ஆகாஷ் ஆனந்த் லண்டனில் எம்.பி.ஏ படித்தவர். இவர், 2017-ம் ஆண்டு, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மாயாவதியுடன் இணைந்து செயல்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலின்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய முகமாக அவர் அறியப்பட்டார். மேலும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆகாஷை நியமித்ததுடன், அவரை தன்னுடைய அரசியல் வாரிசாக கடந்த டிசம்பர் மாதம் மாயாவதி அறிவித்தார்.
ஆனால், தன்னுடைய அரசியல் வாரிசாக அறிவித்த நான்கு ஐந்து மாதங்களில் திடீரென்று பல்டியடித்த மாயாவதி, ஆகாஷ் ஆனந்த்தை தன் அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெறுவதாக தேர்தல் நெருக்கத்தில் கடந்த மே மாதம் மாயாவதி அறிவித்தார். மேலும், ‘ஆகாஷ் ஆனந்த் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடையும் வரை கட்சிப் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்படுகிறார்’ என்று மாயாவதி கூறினார்.

ஆகாஷ் ஆனந்த் பா.ஜ.க-வை விமர்சித்து பேசினார் என்பதுதான், மாயாவதியின் முடிவுக்கு காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அதில், ஆகாஷ் ஆனந்த் பேசியபோது, ‘இதுவொரு புல்டோசர் அரசு, துரோகிகளின் அரசு, இளைஞர்களை பட்டினி போட்டும், முதியவர்களை அடிமைப்படுத்தும் ஒரு பயங்கரவாத அரசு. ஆப்கானிஸ்தானில் தலிபான் போன்று பாஜக அரசாங்கத்தை நடத்துகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,000 கோடியை எடுத்த திருடர்களின் கட்சி’ என்றெல்லாம் பா.ஜ.க-வை விமர்சித்தார் ஆகாஷ் ஆனந்த், இதற்காக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் ஆகாஷ் ஆனந்த்.
2019 மக்களவைத் தேர்தலில் 10 எம்.பி-க்களைப் பெற்றாலும், பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி என்று அந்த எம்.பி-க்கள் வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டனர். அதனால், மாயாவதி விரக்தியடைந்தார். இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்தால், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வுக்கு படுதோல்வி கிடைப்பது உறுதி என்று அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ஆனால், அப்படியொரு முடிவை மாயாவதி எடுக்கவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் சேராமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இல்லாமல், தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவையே மாயாவதி எடுத்தார்.

மாயாவதி தனித்துப் போட்டியிடுவது பா.ஜ.க-வுக்குத்தான் சாதகம் என்று அரசியல் பார்வையாளர்களும், ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களும் கூறினார்கள். அதைப்போலவே, மாயாவதியின் முடிவு பா.ஜ.க-வுக்குத்தான் பலன் தந்தது. உ.பி-யில் பா.ஜ.க 33 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மாயாவதி ‘இந்தியா’ கூட்டணியில் சேர்ந்திருந்தால், உ.பி-யில் பா.ஜ.க-வுக்கு இன்னும் சீட்டுகள் குறைந்திருக்கும். எது எப்படியோ, இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தன் அரசியல் வாரிசு என மாயாவதி அறிவித்திருக்கிறார்.
அதனால், உத்தரப்பிரதேச அரசியலிலும், ஊடகங்களிலும் ஆகாஷ் ஆனந்த் பெயர் மீண்டும் அடிபடுகிறது. மாயாவதியின் அண்ணன் ஆனந்த்குமாரின் மகனான ஆகாஷ் 1995-ம் ஆண்டு பிறந்தவர். இங்கிலாந்தில் எம்.பி.ஏ படித்த இவர்,2016-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அப்போது அகிலேஷ் யாதவ், அஜித் சிங் போன்ற முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் சஹரான்பூரில் நடைபெற்றது. ஆகாஷ் ஆனந்துக்கு அதுதான் முதல் மேடை.
காங்கிரஸையும், பா.ஜ.க-வையும் எதிர்த்து ஆக்ராவில் 2019-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்தான் முதன்முறையாக ஆகாஷ் ஆனந்த் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சிக்குள் அவரது செல்வாக்கு அதிகரித்தது. தீவிரமாக கட்சிப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்து, தன் அத்தையும், கட்சியின் தலைவருமான மாயாவதிக்கு பக்கபலமாக இருந்தார். ஆகவேதான், அவரை தன் அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தார்.

பா.ஜ.க-வுடன் கூட்டணி சேரவில்லையென்றாலும், பா.ஜ.க-வுக்கு சாதகமான அரசியல் நிலைப்பாடுகளை மாயாவதி எடுத்துவருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க-வை விமர்சித்து ஆகாஷ் பேசிவிட்டார். அதனால், ஏராளமான வழக்குகளை எதிர்நோக்கிவரும் மாயாவதி, பா.ஜ.க-வின் கோபத்துக்கு ஆளாவதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் விதமாக ஆகாஷ் ஆனந்த் மீது நடவடிக்கை எடுத்தார்.
மக்களவைத் தேர்தலில் மாயாவதி ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காத நிலையில், ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) தலைவர் சந்திரசேகர ஆசாத், நஜினா மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் தலித் அரசியலை சந்திரசேகர ஆசாத் தீவிரமாக முன்னெடுத்துவரும் பின்னணியில்தான், ஆகாஷ் ஆனந்தை தன் அரசியல் வாரிசாக அறிவிக்கும் முடிவை மாயாவதி எடுத்திருக்கிறார் என்கிறார்கள் உ.பி-யைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88