`திராவிட மாடல் அல்ல… சாராய மாடல் ஆட்சி!’ – முதல்வரைச் சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குக் காரணம் திமுக அரசுதான்” எனக் கூறி, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “வனத்துறை அமைச்சராக இருந்தபோது கல்வராயன் மலைக்கு சென்றிந்தேன். அங்கு எங்கு பார்த்தாலும் அடுப்புகள் எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது எம்.எல்.ஏ., உதயசூரியன் தயவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தெரிவித்தனர். அந்தப் பகுதியில் தான் தற்போது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். கள்ளச்சாராயம் குறித்து தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்., கம்யூ., வி.சி.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகள் வாயை திறக்கவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தால் தான் முழுமையான விபரம் தெரியும்” என்றார்.

தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன், “தி.மு.க., தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. போதைப்பொருளின் சந்தையாக தமிழகம் அமைந்துவிட்டது. மக்களை போதைப்பொருளுக்கு அடிமையாக தி.மு.க., மாற்றிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பு கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டபோது `இனி தமிழகத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாது, அவ்வாறு நடந்தால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஒரு வருடம்கூட நிறைவடையவில்லை அதற்குள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிமுகவினர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது 3 மாதத்திற்கு ஒரு முறை கள்ளச்சாராயம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அப்போது ஆளுங்கட்சியை சேர்ந்தவருக்கு கள்ளச்சாரய வியாபாரத்தில் தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் கட்சியை விட்டு உடனடியாக நீக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் – முதல்வர் ஸ்டாலின்

தற்போது தமிழகத்தில் கையாளாகாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். தி.மு.க., ஆட்சியில் போலீஸார் சுதந்திரமாக செயல்படவிடவில்லை. தி.மு.க., நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் போலீஸ் இயங்குகிறது. தி.மு.க., எம்.எல்.ஏ., முதல் அடிப்படை உறுப்பினர்கள் வரை கள்ளக்குறிச்சியில் மாமூல் பெற்றுள்ளனர். தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால் இது போன்ற பல சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும். காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் இது போன்று சம்பவங்கள் செய்ய முடியாது. இது திராவிட மாடல் அரசு அல்ல சாராய மாடல் அரசு. முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.