`காவல்துறையின் கையைக் கட்டிப்போட்டது யார்?’ – கள்ளச்சாராயம் விவகாரத்தில் கொதிக்கும் வேலுமணி!

கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை தினமும்  உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள், காவல்துறை மெத்தனப் போக்கால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது.

அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வேலுமணி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. கள்ளச்சாராய விற்பனை நடந்த இடத்தின் அருகில் காவல் நிலையம், நீதிமன்றம், அரசு அலுவலங்கள் இருக்கின்றன. இதன் பின்னணி யார் என்பது வெளியில் வர வேண்டும்.

மெத்தனால் போன்ற மூலப்பொருள்கள் ஆந்திராவில் இருந்து வந்துள்ளன. காவல்துறை மீது மட்டும் நடவடிக்கை இல்லாமல், இதற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் படிப்புக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும்.

அதிமுக ஆர்ப்பாட்டம்

காவல்துறை எங்கள்மீதான அடக்கமுறையை விட்டுவிட்டு, கஞ்சா விற்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் விற்ற விவகாரத்தில் காவல்துறையினரின் கையை கட்டிப் போட்டது யார். கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க தயாராகவே இருக்கிறோம். பல வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்திருக்கிறோம். தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டோம்.  அதிமுக ஆட்சியில் பல பிரச்னைகள் வந்தபோது போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

 எங்களது  சட்டமன்ற உறுப்பினர்கள் 2023-ம்  ஆண்டு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது, இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்.” என்றார்.