NEET; நீட் முதுகலை நுழைவுத்தேர்வு தள்ளிவைப்பு!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்து முடிந்தது. அந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், வினாத்தாள் கசிவு தொடர்பாகவும் சர்ச்சைகள் வெடித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து நீட் தேர்வு முகமையில் முறைகேடுகள் நடந்ததாக, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தொடர்பாகச் சிலர் கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று (23-06-2024) நடைபெறவிருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. நீட் நுழைவுத்தேர்வுகளை மிகவும் நேர்மையான முறையில் நடத்த விரும்புவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த திடீர் அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக் கூறப்படும் நிலையில், கூடிய விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.