கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரையில் 55 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழக முதல்வரும் வழக்கம்போல அதிகாரிகளை டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் செய்தல், விசாரணை ஆணையம் அமைத்தல், வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றுதல், லட்சங்களில் நிவாரணம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக, கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்திருக்கிறார். இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.50,000-ம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும், அவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையையும் அறிவித்திருக்கிறார். அதில் பலரின் குடும்பத்தினருக்கும் நேரில் சென்று நிவாரண நிதியை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது மிகப்பெரிய விமர்சனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சாதாரணமாக சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, கட்டடம் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கெல்லாம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் மட்டுமே தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. வயிற்றுப் பிழைப்புகாக உயிரைப் பணயம் வைத்து வேலைசெய்து எதிர்பாராத விபத்தில் உயிரிழக்கும் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்குகூட நிவாரண நிதியாக வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார். அதேபோல சமீபத்தில் வெளிநாட்டுக்கு பிழைப்புக்காகச் சென்று குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் அறிவித்தார்.
ஒரு விபத்துக்கே சில லட்சங்களில் மட்டும் நிதி ஒதுக்கும் முதலமைச்சர், குற்றச்செயல் செய்து உயிரிழந்தவர்களுக்கு அதிகபட்ச நிதி அறிவிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பதும், வாங்கி அருந்துவதும் சட்டப்படி குற்றம். அப்படி, சட்டவிரோதமாக உடலுக்குத் தீங்கு என்று தெரிந்தும்கூட கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்த 55 பேரின் குடும்பத்தினருக்கு அரசு கஜானாவிலிருந்து கோடிக்கணக்கில் நிவாரணம் அறிவிப்பது எந்த வகையில் நியாயம்? என சமூக ஆர்வலர்களும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
குறிப்பாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவிக்கிறார். அப்படியென்றால் கள்ளச்சாராயத்தை முதல்வர் ஊக்குவிக்கிறாரா… இது தவறான முன்னுதாரணம். அதிகாரிகளை மாற்றுவதோ, ரூ.10 லட்சம் கொடுப்பதோ இதற்குத் தீர்வல்ல. அரசும், காவல்துறையும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களோடு கைகோத்துக்கொண்டு ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர, தடுப்பதில்லை. கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்ததால்தான் தி.மு.க-வுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அதனுடன் ஒப்பிடுவதற்காக முதல்வருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அடுத்தவர்கள்மீது பழிபோடுவதால் மக்களுக்கு விடிவு கிடைக்காது. இதற்கு என்ன தேர்வு என்பதை அரசு யோசித்து செயல்பட வேண்டும்!” என குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதேபோல, நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், “மக்களின் வரிப்பணத்திலிருந்து, ஆளுக்கு 10 லட்சம் என இப்படி கோடிக்கணக்கில் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணமாக கொடுக்கத்தான் வேண்டுமா? ஏன் அந்த கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்றவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று அதை அந்த குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டியது தானே?” என விமர்சித்திருக்கிறார். அதேபோல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேபோல, நடிகை கஸ்தூரியும், “10 லட்சம். விளையாட்டு வீரருக்கோ? போரில் உயிர் நீத்தவருக்கோ? விஞ்ஞானிக்கோ விவசாயிக்கோ வா? குடும்பத்தை கைவிட்டு கள்ளசாராயத்தை குடித்து செத்தவருக்கு. இந்த திராவிட மாடலில் பத்து லட்சம் சம்பாதிக்க உண்மையா உழைக்க தேவையில்லை. மொடா குடிகாரனா இருந்தா போதும். சிவகாசி, விருதுநகர் போன்ற பாட்டாசு ஆலைகளில் உழைத்து குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் அப்பாக்கள், அம்மாக்கள் அண்ணன், தம்பி, அக்க தங்கச்சி அப்படி யாரு வெடி பொருள் தயாரிக்கும்போது ஒவ்வொரு வருஷமும் இறக்கிறவர்களுக்கு எவளோ நஷ்ட ஈடு கொடுத்தது இந்த அரசு… எத்தனை பேருக்கு தெரியும்?” என காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தொடர்ந்து சட்டப் பஞ்சாயத்து இயக்கமும், “அரசின் நிர்வாக தோல்வியால் ஏற்பட்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பிற்கு நிவாரணம் வழங்க மக்கள் வரிப்பணத்தை தொடாதே!” என வலியுறுத்தியிருக்கிறது. இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போல கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். இதேபோல அவர்களிலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இந்த நிலையில், “நிவாரணம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் விமர்சனம் வரத்தான் செய்யும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நலன் கருதிதான் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. பெற்றோரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்காக தான் இந்த நிதி வழங்கப்படுகிறது!” என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் மக்களாகிய உங்கள் கருத்து என்ன?! கமென்ட் செய்யுங்கள்..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88