கள்ளச்சாராய விவகாரம்: `முழு விசாரணையையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்!’ – நிர்மலா சீதாராமன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததே காரணம் எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, கள்ளச்சாராய வியாபாரி உள்ளிட்ட பலரை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

மேலும், இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் மற்றும் சஸ்பெண்ட் செய்த முதல்வர் ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் குழு ஒன்றையும் அமைத்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தின் முழு விசாரணையையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், “இதில், 200-க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 56 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பெரும்பாலோனோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். அரசாங்கத்தால் நடத்தப்படும் `டாஸ்மாக்’ கடைகளில் உரிமம் பெற்ற மதுபானங்கள் கிடைக்கும் மாநிலத்தில், அதையும் மீறி கள்ளக்குறிச்சி நகரின் மத்தியில் ரசாயனம் கலந்த சட்டவிரோத மதுபானம் வழங்கப்படுகிறது. எனவே இந்த விவகாரம் முழுவதையும் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நிர்மலா சீதாராமன்

மேலும், இந்த சம்பவத்தில் காங்கிரஸைச் சாடிய நிர்மலா சீதாராமன், “இதற்கெதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எங்கே… ராகுல் காந்தி எங்கே… கள்ளச்சாராயத்தால் பட்டியலினத்தவர்கள் இறக்கும் போது, ​​ராகுல் காந்தியிடம் இருந்து எந்த அறிக்கையும் வருவதில்லை” என்று விமர்சித்தார்.