2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) கருத்துக்கணிப்பு வெளியிட்டது. இந்த நிறுவனம் மட்டுமன்றி நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி போன்ற பல்வேறு வட இந்திய ஊடகங்கள், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-400 தொகுதிகள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.
ஆனால், தேர்தல் முடிவுகள் இதற்கு அப்படியே நேர்மாறாய் வந்ததோடு, கருத்துக்கணிப்புகளும் பொய்த்துப்போனது. பா.ஜ.க கூட்டணியால் 300 இடங்களைக்கூட தொடமுடியவில்லை, 294 இடங்களை மட்டுமே வென்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த பா.ஜ.க இந்த தேர்தலில் வெறும் 232 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும்பான்மையை இழந்தது. அதோடு, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சி நடத்திய தேர்தல் முடிவுகள் பற்றிய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ‘ஆக்சிஸ் மை இந்தியா’ நிர்வாக இயக்குநர் பிரதீப் குப்தாவிடம், கருத்துக்கணிப்பு பொய்த்துப்போனதை நெறியாளர் ராஜ்தீப் சர்தேசாய் சுட்டிக்காட்ட, விவாதத்துக்கு இடையிலேயே அவர் கண்ணீர்விட்டு அழுதார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வைரலானது.
இன்னொருபக்கம், தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பில், பா.ஜ.க பெரும்பான்மை பெறும் என்று கூறப்பட்டதால், பங்குச்சந்தையில் புள்ளிகள் பெரும் உச்சத்தைத் தொட்டன. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற குழு அமைத்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்த, தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளுக்குத் தடைவிதிக்கவும் சில தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்தது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து பேசியிருக்கும் ஆக்சிஸ் மை இந்தியாவின் இயக்குநர் பிரதீப் குப்தா, “இது போன்ற கோரிக்கைகள் குழந்தைத்தனமானவை. ஒவ்வொரு குடிமகனும் தேர்தல் அமைப்பு முறை குறித்தும், தேர்தல் நடத்தை விதி மற்றும் முடிவுகளை அறிய விரும்புகின்றனர். மேலும், பங்குச்சந்தைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதோடு, எங்கள் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளை நாங்கள் மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இது எங்களுக்கு கிடைத்த ஒரு நல்வாய்ப்பு. எங்கள் மீது இருக்கிற கலங்கத்தை துடைக்கக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதி விசாரணையை ஏற்கிறேன்.
ஆக்சிஸ் மை இந்தியா 2013-ல் கருத்துக்கணிப்புகளை நடத்தத் தொடங்கியது முதல், தற்போது வரை 65 தேர்தல்களில் 61 தேர்தல்களைச் சரியாக வெற்றி விகிதத்தைக் கணித்திருக்கிறது. இதில், 2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் தொங்கு சட்டசபை அமையும் என துல்லியமாகக் கணித்து கூறியது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது” என்று கூறினார். மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கருத்துக்கணிப்பு நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த குப்தா, தாங்கள் எந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காகவும் பணியாற்றவில்லையெனத் தெரிவித்தார்.