”6 முறை அறுந்த நெல்லையப்பர் தேர் வடங்கள்”- அதிகாரிகளின் அலட்சியம் காரணமா? – வேதனையில் பக்தர்கள்!

தமிழக சிவாலயங்களில் பிரசித்தி பெற்றது நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயில். பழைமை வாய்ந்த இக்கோயிலில் 518 – வது ஆனிப் பெருந்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 21-ம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிவரை நடைபெற்றது. முதலில் விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

நெல்லையப்பர் – காந்திமதி

அதைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். நெல்லையப்பர் தேரை காலை 6.30 மணி முதல் 7.46 மணிக்குள் வடம் பிடித்து இழுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. காலை 7.20 மணி அளவில் சுவாமி நெல்லையப்பர் தேரினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி, எம்.பி., ராபர்ட் புருஸ் உள்ளிட்டவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது தேரின் வடங்கள் அறுந்து போயின. இதனால் திட்டமிட்ட நேரத்தில் தேரினை இழுக்க முடியாமல் போனது. கோயில் நிர்வாகம் சார்பில் உடனடியாகப் புதிய தேர் வடம் கொண்டுவரப்பட்டு அறுந்த வடங்களுக்குப் பதிலாக கட்டப்பட்டன. அதைத் தொடந்து காலை 8.18 மணியளவில் மீண்டும் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆனால், தேர் சில அடிகள் நகர்ந்ததும் இரண்டாவது முறையாக அறுந்து போனது. தொடர்ந்து மற்றொரு புதிய வடம் கொண்டுவரப்பட்டுக் கட்டப்பட்டு காலை 8.32 மணிக்குத் தேர் புறப்பட்டது.

தேரோட்டம்

நெற்றிப்பட்டம் கட்டி அலங்கரிக்கப்பட்ட காந்திமதி யானை முன்னே செல்ல, சிவ தொண்டர்களின் பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது. ஆனால், 10 அடி தூரம் மட்டுமே தேர் சென்ற நிலையில் மீண்டும் 3-வது முறையாக  வடம் அறுந்ததால் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வடத்திற்குப் பதிலாக இரும்புச் சங்கிலி கோர்க்கப்பட்டுத் தேர் இழுக்கப்பட்டது.

இரும்புச் சங்கிலி நீளமாக இல்லாததால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கைகளைக் கோர்த்து தேரை இழுத்தனர். காலை 9.50 மணி அளவில் தேர், வாகையடி முனைக்கு வந்து சேர்ந்தது. பகல் 11.30 மணியளவில்  சந்திப்பிள்ளையார்கோயிலின் திருப்பத்திற்கு முன்பாக வந்தபோது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட வடம் வந்து சேர்ந்தது. ‘தந்தைக்கு உதவிய மகன்’ என பக்தர்கள் மெய் சிலிர்த்தனர்.

அறுந்த வடங்கள்

பின்னர் 3 வடங்கள் பொருத்தப்பட்டதால் ஓரளவு சுலபமாகத் தேர் நகர்ந்தது. இப்படியாக 6 முறை வடம் அறுந்தது. இதற்கிடையில் ஒருமுறை சாலையில் தேரின் ஒரு சக்கரம் பதிந்ததாலும் ஒருமுறை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிற்பகல் 1 மணியளவில் காவல் நிலையம் அருகில் தேர் நிறுத்தப்பட்டதும், பக்தர்கள் மதிய உணவிற்காகப் புறப்பட்டுச் சென்றனர். பின்னர், மாலையில் பக்தர்களின் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் தேரும், தொடர்ந்து காந்திமதி அம்பாளின் தேரும், அதனையடுத்து சண்டிகேஸ்வரர்  தேரும் இழுக்கப்பட்டது.

சுவாமி தேர் இரவு 9 மணிக்கும், அம்பாள் தேர் இரவு 10 மணிக்கும் நிலையை அடைந்தது. வழக்கமாக நிலையை அடையும் நேரத்தைவிட வடம் அறுந்ததால் சுமார் 3 மணி நேரம் தாமதமாக நிலையை அடைந்தது. வடங்கள் அடுத்தடுத்து அறுந்ததால் 2 பக்தர்கள் தடுமாறிக் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.  தேர் வடம் அறுந்தது குறித்து பக்தர்களிடம் பேசினோம்.

“தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்றால் அது  எம்பெருமான் நெல்லையப்பரின் தேர்தான்.  450 டன் எடை கொண்டது. கடந்த 518 ஆண்டுகளாக ஓர் ஆண்டுகூட இடைவெளியின்றித் தொடர்ந்து பக்தர்களால் இழுக்கப்பட்டு வருகிறது.

அறுந்த வடங்கள்

இவ்வளவு பெரிய தேரை இழுக்க உறுதியான வடங்கள் அவசியம். இதற்காகப் பயன்படுத்தப்படும் 4 வடத்தின் உறுதித் தன்மையைத் தேரோட்டத்திற்கு முன்பே அறநிலையத்துறை அதிகாரிகளும், அறங்காவலர் குழுவினரும் பரிசோதித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இதை முறையாகச் செய்யவில்லை. கோயிலில் இருந்த பழைய வடங்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டும் 4 முறை வடம் அறுந்ததால்  பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வடங்கள் பழையதாகிவிட்டன என்பதாலும், கடந்த டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த மழையால் கோயிலுக்குள் மழை நீர் புகுந்ததில் வடம் நனைந்து அதன் உறுதித்தன்மையை இழந்துவிட்டது. ஆனால், மழை வெள்ளத்திற்குப் பிறகு வெயிலில் வடங்களை முறையாக வெயிலில் காய வைக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்போதே பழைய வடங்களுக்குப் பதிலாக புதிய வடங்கள் பின்னப்பட வேண்டும் என்ற பக்தர்கள், சிவ தொண்டர்களின் கோரிக்கையைக் கோயில் நிர்வாகமோ அறங்காவலர் குழுவோ காதில் வாங்கவில்லை.

திருச்செந்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வடங்கள்

ஆனித்திருவிழா கொடியேற்ற நிகழ்வின்போதும், தேர் தண்ணீர் பாய்ச்சி சுத்தப்படுத்தும் நிகழ்வின் போதும் வடங்களை மாற்றச் சொல்லியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எந்த ஆண்டும் இப்படி நிகழ்ந்ததில்லை” என்றனர் வருத்தத்துடன்.  

இந்த நிலையில் சட்டப் பேரவையில் நெல்லையப்பர் கோயில் தேர் வடம் அறுந்ததற்கு விளக்கம் அளித்த இந்து சமயநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,

“ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர் நெல்லையப்பர் கோயில் தேர் ஆகும். 28 அடி அகலமும், 28 அடி நீளமும், 70 அடி உயரமும் கொண்டது.

அந்தத் தேருக்குப் பின்னால் இருந்து நெம்புகோல் தருவதற்கு முன்பாக பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஒட்டுமொத்தமாக இழுத்ததன் காரணமாக தேரின் வடம் அறுந்தது. அதற்கு மாற்றாகத் திருச்செந்தூரில் தயாராக வைக்கப்பட்டிருந்த தேர் வடம் கொண்டு வரப்பட்டு, நெல்லையப்பர் தேரில் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. எல்லாத் தேர்களுக்கும் தேரின் இணைப்புப் பகுதியில் இரும்புச் சங்கிலி இருக்கும். நெல்லையப்பர் கோவில் தேர் 450 டன் எடை கொண்டது. அதிக எடை கொண்ட தேர்களுக்கு கயிற்றினால்தான் வடம் பின்னப்படுகின்றது.

நெல்லையப்பர் தேர்

தேருக்கும், வடத்திற்கும் தீயணைப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சான்று அளித்த பின்னர்தான் தேர் வீதி உலாவிற்கு எடுத்து வரப்பட்டது” எனக் கூறியுள்ளார்.

”அமைச்சரின் விளக்கத்தின்படி பக்தர்கள் பக்திப் பரவசத்தில் வடத்தை பிடித்து இழுத்தாலும் 6 முறை அறுந்துபோவதற்குக் காரணம் என்ன?” கேள்வி எழுப்பியுள்ளனர் சிவ தொண்டர்கள். என்னதான் விளக்கம் கூறினாலும் பிரசித்தி பெற்ற பழைமையான சிவன் கோயில் தேரோட்டத்தினை முன்னிட்டு தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் முறையாகச் செய்யவில்லை என்பதே பக்தர்களின் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.