கள்ளக்குறிச்சி: வீடுகளுக்கு சென்று காசோலை வழங்கினாரா உதயநிதி?! – அமைச்சர் பதிலால் எழுந்த விமர்சனம்

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் 140-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதையடுத்து நேற்று முன்தினம், அதாவது 20-ம் தேதி அந்த தொகைக்கான காசோலையை வழங்குவதற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காகவும் , விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வருவார் என்று கூறப்பட்டது. அதற்காக உயிரிழந்தவர்களின் குடும்ப உறவுகளை அழைத்து வந்த அதிகாரிகள், அவர்களை அங்கிருந்த அரசுப் பள்ளியில் வரிசையாக அமர வைத்தனர். உதயநிதி இதோ வந்துவிட்டார்.. அதோ வந்துவிட்டார் என்று அதிகாரிகளும், கட்சிக்காரர்களும் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர நீண்ட நேரமாகியும் உதயநிதி வரவில்லை.

அதில் கடுப்பான பாதிக்கப்பட்ட மக்கள், ` செத்துப் போனவங்க பக்கத்துல இருந்து அழக் கூட முடியாம இங்க உக்கார வச்சிட்டீங்களே’ என்று அதிகாரிகளிடம் குமுறினர். அதையடுத்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அங்கு வந்து சேர்ந்த அமைச்சர் உதயநிதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலைகளை வழங்கினார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்த நிலையில்தான் 21-ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களைப் பார்க்க வந்திருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்குச் சென்று அரசின் ரூ.10 லட்சம் நிவாரண உதவிகளை வழங்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்குச் சென்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், ரூ 10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்’ என்று தெரிவித்தார். அந்த கருத்துதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரவைத்து, பின்னர் உதயநிதி வந்த பிறகு காசோலை வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி இல்லம் இல்லமாக சென்று காசோலை வழங்கியதாக அமைச்சர் சொல்லி இருக்கும் கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88