கண்டதேவி: ஊருக்குள் குவிந்த 3,000 போலீஸார்… 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கண்டதேவி தேரோட்டம்.!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகிலுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடந்து முடிந்துள்ளது.

குவிக்கப்பட்ட போலீஸ்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது.

இப்பகுதியில் உள்ள தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி நாடுகள் என்று அழைக்கப்படும் நான்கு நாட்டுக்குள் வரும் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும் .

இந்நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு தேர் வடம் பிடிப்பதில் இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின்பு ‘அனைத்து சாதியினரும் இணைந்து தேரை வடம் பிடித்து இழுக்க வேண்டுமென்றும், இதை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும்’ புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையால் 2002 முதல் 2006 வரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகமே முன் நின்று தேரோட்டத்தை நடத்தியது. இதற்கிடையே கோயில் குடமுழுக்க திருப்பணிகள் நடந்ததாலும், அதைத் தொடர்ந்து தேர் புதுப்பிக்கும் பணி நடந்ததால் தேரோட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது.

அதன் பின்பு தேர் புதுப்பிக்கப்பட்டும் தேரோட்டம் நடத்தப்படாததால் கண்டதேவியை சேர்ந்த ஒரு நபர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தேரோட்டம் நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடுக்க, அனைத்து சாதியினரையும் கலந்துகொள்ளச் செய்து தேரோட்டம் நடத்த வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் மீண்டும் கடுமையாக உத்தரவிட்டது.

தடுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்ட கண்டதேவி மக்கள்

அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் தேர் வெள்ளோட்டத்தை அறநிலையத்துறை ஊழியர்களைக் கொண்டு நடத்திய மாவட்ட நிர்வாகம், தேரோட்டம் குறித்து சமீபத்தில் நடத்திய சமாதானக் கூட்டத்தில், அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்து தேரோட்டம் நடத்த முடிவெடுத்ததை அடுத்து, இக்கோயிலுக்கு உரிமையுள்ளதாக சொல்லப்படும் நான்கு நாட்டு மக்களில் குறிப்பிட்ட அளவிலான ஆட்களுக்கு மட்டும் அனுமதி அட்டை வழங்கப்பட்டு இன்று காலை தேரோட்டம் நடந்தது.

நான்கு வடத்தையும் பிடிக்க ஒரு நாட்டுக்கு 100 பேர் என 400 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், குறைவான நபர்களே கலந்துகொண்டார்கள். அதிலும் வடம் பிடிக்கும் உரிமை கேட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக அனுமதிக்கப்படவில்லை என்றும், கூட்டத்தை அதிகமாக கட்ட ஆண், பெண் காவல்துறையினரை சாதாரண உடையில் வரவைத்தும் அறநிலையத்துறை, வருவாய்த்துறை ஊழியர்களையும் வைத்து தேரோட்டம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள்.

தேரைச் சுற்றிலும் போலீஸ்

அனுமதி அட்டை பெறாமல் தேரோட்டம் காண வந்த நான்கு நாட்டு மக்களில் பலர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். கோயில் அமைந்துள்ள கண்டதேவி கிராமத்தைச் சேர்ந்த மக்களோ தடுப்பு வேலிக்கு வெளியே நின்றுதான் தேரை பார்த்தார்கள்.

கலெக்டர் ஆஷா அஜித், ஏடிஜிபி அருண், தென்மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில் நான்கு டி.ஐ.ஜி-க்கள், 12 எஸ்.பி-க்களுடன் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரைச்சுற்றிலும் காவல்துறையினரே நிறைந்து காணப்பட்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட அமைச்சர் பெரியகருப்பனும் கலந்துகொண்டார்.

தேரோட்டம்

மேளதாளங்கள் முழங்க சொர்ணமூர்த்தீஸ்வரர் தேரில் எழுந்தருள, கோயிலிலிருந்து புறப்பட்ட தேர் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

கண்டதேவியை சுற்றிலும் 18 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒருவழியாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டத்தை நடத்தி முடித்ததில் மாவட்ட நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb