மே 27, 2020… நினைவிருக்கிறதா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

கொடுமையான கொரோனா காலகட்டம். குடும்ப சகிதமாக… ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று முகத்தை மூடிக்கொண்டு குரல் கொடுத்தீர்களே… அந்தக் கண்கொள்ளாக் காட்சியைத்தான் சொல்கிறோம்.

‘அட, மக்களுக்காக இந்தக் கொரோனா நேரத்துலயும் பொண்டாட்டி புள்ளகுட்டியோட ஸ்டாலின் எவ்வளவு தைரியமா போராட்டம் நடத்தறாரு’ என்று தமிழகத்துப் பெண்கள் உங்கள் குடும்பத்துக்கு திருஷ்டி சுற்றிப்போடாத குறைதான்.

இதோ… ஜூன் 18 குடும்பம் குடும்பமாக… கொத்துக் கொத்தாக… கள்ளக்குறிச்சியில் மடிந்துகொண்டே இருக்கிறார்கள்… பாழாய்ப்போன கள்ளச்சாராயத்தால் அல்ல, உங்களின் பாராமுகத்தால்.

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ – ஸ்டாலின் நடத்திய போராட்டம்

இதே வாய்தான்… ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை நடத்தியது.

மதுக்கடைகளுக்கு எதிராகக் குடும்பத்தோடு போராடியபோது நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். இன்று குடும்பம் குடும்பாக கள்ளக்குறிச்சியில் உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கும்போது நீங்கள் மாண்புமிகு முதலமைச்சர்!

உங்களுக்கு புரமோஷன் கிடைத்ததைத் தவிர, ஒரு மண்ணும் மாறவில்லை? உண்மையிலேயே உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

இதே வாய்தான்… ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை நடத்தியது. ‘தமிழகக் குடும்பங்களை குலைக்கும், பெண்களை கைம்பெண்களாக்கும் டாஸ்மாக்கை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடுவோம்’ என்று தேர்தல் வாக்குறுதியாக உறுமியது. பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அதை ஆமோதித்தார் உங்கள் அப்பா கருணாநிதி. ஆனால், ஆட்சியைப் பிடித்த பிறகு டாஸ்மாக்கை மட்டுமல்ல… கள்ளச்சாராயத்தையும் அல்லவா ஆறாக ஓடவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

2023, மே…

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 3 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பலரும் அன்றாடங்காய்ச்சிகள். இந்தக் குடும்பங்கள் அத்தனையுமே அன்றைக்கு வீதியில் விடப்பட்டன. மாநிலம் முழுக்கவே கொந்தளிப்பு எழவே… காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பலரும் பணியிடை நீக்கம்/மாற்றம் செய்யப்பட்டனர். கள்ளச்சாராயம் விற்ற அமரன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்று, “இதை கொஞ்சமும் சகித்துக்கொள்ள முடியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய், சிகிச்சையிலிருப்பவர்களுக்கு தலா 50 ஆயிரம் என நிதி உதவி வழங்கப்படும். வழக்கு சிபிசிஐடி- பிரிவுக்கு மாற்றப்படும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன” என்று குரல் கம்மி தழுதழுத்தீர்கள்.

கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் | Kallakurichi Illicit Liquor Deaths

2024, ஜூன்…

சும்மா சொல்லக்கூடாது… விழுப்புரம் & செங்கல்பட்டு கள்ளச்சாராய மரணங்களைவிட இங்கே நடவடிக்கை இன்னும் வீரியமே. ஆம், அங்கே மாவட்ட அளவிலான அதிகாரிகள்தான் அப்போது பணியிடைநீக்கம்/மாற்றம் செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மட்டுமல்லாது… சென்னையில் உட்கார்ந்து கொண்டு தமிழகம் முழுக்க கள்ளச்சாராயத்தைத் தடுத்துக் கொண்டே இருக்கும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி, ஏடிஜிபி வரை பணியிட மாற்றம்/நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாராய வியாபாரி கன்னுக்குட்டி கோவிந்தராஜன் உள்பட பலரையும் கைது செய்துள்ளது காவல்துறை.

கள்ளக்குறிச்சியில் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். பலருக்கும் கண்பார்வை முற்றிலும் பறிபோயுள்ளது. பலருடைய நிலைமை மிகமிக கவலைக்கிடமாகவே இருக்கிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சமூட்டும் செய்திகளே வந்தவண்ணமுள்ளன.

இது ஒரு செயற்கைப் பேரழிவு. ஆம், கயவாளி காக்கிகளின் லஞ்ச வெறி, கள்ளச்சாராய அரக்கன்களின் லாப வெறி, அதில் பங்குபோடும் அதிகாரவர்க்கம் மற்றும் அரசியல்வாதிகளின் பண வெறி இத்தனை வெறிகளும் கூட்டணிப் போட்டு, திட்டமிட்டே உருவாக்கிய பேரழிவு. அத்தனையையும் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த உங்களின் அலட்சியத்துக்குக் கொடுக்கப்பட்ட விலை. “நாற்பதும் நமதே” என்று நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிய மக்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா?

விளிம்பு நிலை மக்களின் உயிர்கள் பறிபோகும் போதெல்லாம் பெயருக்கு சம்பிரதாய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இம்முறையும், அதேபோல வரிசை கட்டியுள்ளன அறிக்கைகள். ஆனால், அப்பாவை, கணவரை, சகோதரரை, மகனை, அம்மாவை என உறவுகளை இழந்து நிற்கும் குடும்பங்களும், அவர்களின் ஓலமும் தொடர்கதையாகவே இருக்கின்றன. அத்தனையும் அடுத்தவேளை சோற்றுக்காகக் கூலி வேலை தேடி அல்லாடும் மிகமிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும் குடும்பங்கள்.

இப்போதும் உணர்ச்சிவசப்பட்டிருக்கும் நீங்கள், ’’உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், சிகிச்சையிலிருப்பவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 10 தனிப்படைகள் அமைத்து காவல்துறை விசாரித்து வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறியிருக்கிறீர்கள்.

ஆம்… அதே டெய்லர், அதே வாடகைதான். இரண்டு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் பெயர்கள், பணியிடமாற்றம்/நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள், பதவிகள்தான் மாறியிருக்கின்றன. நிகழ்ந்த குற்றம் அதைவிட கூடுதல் கொடுமை!

கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் | Kallakurichi Illicit Liquor Deaths

சென்ற முறை 18 என்ற அளவில் இருந்த உயிரிழப்பு இம்முறை 55 என்பதையும் கடந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சபாஷ், ‘வளர்ச்சிப் பாதை’யில் சென்றுகொண்டிருக்கிறது கள்ளச்சாராய தொழில்.

விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய பலிகளுக்கு பிறகு தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட சரக்குகள், மலைக்க வைத்தன. காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என அனைவரும் ‘கவனிக்கப்பட்டு’ கள்ளச்சாராய வியாபாரம் ’மாமூலாக’ நடப்பதற்கு சாட்சியாக அமைந்தன அந்தத் காட்சிகள். ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் தங்குதடையின்றி கள்ளச்சாராய ஆறு ஓட ஆரம்பித்துவிட்டது.

பொதுமக்கள் புகார் கொடுத்தால்… “தம்பி உம்மேல புகார் வந்திருக்கு. மேட்டுத்தெரு ராமுதான் கொடுத்திருக்கான்” என்று புகார் மனுவை கள்ளச்சாராய வியாபாரிகளுக்கே ஃபார்வர்ட் செய்து, லஞ்சத் தொகையை மேலும் அதிகரித்துக் கொள்ளும் கயவாளி காக்கிகள் இருக்கும்போது, யாருக்கு புகார் தருவதற்கு தைரியம் வரும். இத்தகைய காக்கிகள் எல்லாம் சாதி, மதம், அரசியல் என்கிற அத்தனை அரவணைப்புகளோடும் தைரியமாக நடைபோடுகிறார்களே?!

இங்கே, கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மொத்தமும் அத்தனை கட்சிகளின் ஆட்சியிலும் நாடகமே.

Kallakurichi Illicit Liquor Deaths | கள்ளக்குறிச்சி அவலம்…

ஒவ்வொரு கள்ளச்சாராய வியாபாரியும் மாதத்துக்கு ஒரு தடவை தங்கள் கும்பலிலிருந்து ஒருவரை, தாங்களாகவே முன்வந்து கள்ளச்சாராய வழக்குக்காக தத்துக் கொடுக்க வேண்டும். ஆம்… ‘போலீஸ் கள்ளச்சாராய வேட்டை. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவிந்தசாமி என்கிற சாராய வியாபாரியை போலீஸ் விரட்டிப் பிடித்தது. பத்தாயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு’ என்று நாளிதழ்களில் செய்திகள் படபடக்கும்.

இப்படி ஐந்தாம்படை பணிகளை செவ்வனே செய்வதற்காக மட்டும்தான் செயல்படுகிறது தமிழகக் காவல்துறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு. சாதாரண காவலர்கள் தொடங்கி, ஏடிஜிபி அளவிலான அதிகாரி வரை ஆயிரக்கணக்கில் இந்த ஐந்தாம் படையில் இருக்கிறார்கள். கள்ளச்சாராய அரக்கன்களிடம் லட்சம் லட்சமாக கிம்பளத்துடன்… லட்ச லட்சமாக அரசாங்க சம்பளம் வேறு. இந்தத் துறையில் இடம்பிடிப்பதற்காக எம்.எல்.ஏ, எம்.பி, மாவட்ட செயலாளர், மந்திரி என்று பலமான சிபாரிசு வேறு.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணச் செய்தி வந்த பின்னர், அன்றைய தின மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத், ’கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர்’ என்று அவசர அவசரமாக வாய் திறந்தார். மாறாக… ‘கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்திருக்கிறது, நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற எச்சரிக்கையை அவர் தந்திருந்தால், கள்ளச்சாராய மரணமடைந்தவர்களின் இறுதிச் சடங்கிலும் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

மரண வீடுகளுக்கே சாராய சப்ளை நடந்திருக்கிறது என்றால், அந்த கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஆளுங்கட்சியினருக்கும் இடையோன கூட்டணி எத்தனை பலமானது என்பது தெள்ளத் தெளிவாகிறது?

‘எங்கள் நிலத்தை எங்களிடமிருந்து அபகரிக்காதீர்கள்’ என்று போராடிய விவசாயிகளின் மீதெல்லாம் குண்டர் தடுப்புச் சட்டத்தை பாய்ச்சிய உங்கள் அரசு, கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு கம்பளம் விரித்து, பாதுகாப்பு கொடுத்து, மக்கள் உயிர்களை பறித்துக் கொண்டிருக்கிறது.

பறிபோன உயிர்களை நினைத்துக் குடும்பம் குடும்பமாகக் கதறிக் கொண்டிருக்கிறார்கள், பாதிக்கப்பட்ட அப்பாவிகள். இந்த நிலையிலும், சிலர் நீதி நியாயம் பேசக் கிளம்பியிருப்பது… நடந்திருக்கும் கொலைகளைவிடக் கொடுமை.

’கள்ளச்சாராயம் குடிச்சவங்க செத்தா சாகட்டும்… அரசு ஏன் நிவாரண நிதி கொடுக்கணும்? அது, கள்ளச்சாராயம் குடிக்கிறவங்களை ஊக்குவிக்கிறது மாதிரியாகிடும்…’ என்று இந்த நேரத்தில் ’புத்திசாலித்தனமாக’ சிலர் கிளம்பியுள்ளனர்.

நடந்திருப்பது திட்டமிட்ட பேரழிவு. நடத்தியது ஆளுங்கட்சியும் அரசாங்கமும் அதிகாரிகளும்தான். கொடுக்கப்பட வேண்டியது நிவாரணமல்ல… நஷ்டஈடு. சட்டப்படியும் அதுவே சரியான நடவடிக்கை. அது, நிராதரவாக நிற்கும் குடும்பங்களுக்கானது.

குடிக்கவிடாமல் தடுத்து புத்தி சொல்லவேண்டிய அரசாங்கமே கடையைத் திறந்து வைத்துக் கொண்டு குடிக்கச் சொல்லும்போது மக்கள் என்ன செய்வார்கள்?

மதுவிலக்கை கொண்டு வருவதும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதும் அரசின் பொறுப்பு. இதில், தனிமனித பொறுப்புப் பற்றி பேசலாமே தவிர, மக்களை குற்றவாளியாக்குவது என்ன நியாயம்? குடிக்கவிடாமல் தடுத்து புத்தி சொல்லவேண்டிய அரசாங்கமே கடையைத் திறந்து வைத்துக் கொண்டு குடிக்கச் சொல்லும்போது மக்கள் என்ன செய்வார்கள்?

அதேசமயம், அரசாங்க பணத்தை நிவாரணம் என்கிற பெயரில் நஷ்டஈடாக கொடுப்பது பெரும்தவறே! கள்ளச்சாராய அரக்கன்கள், அவர்களுக்குத் துணைபோன கயவாளி காக்கிகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிலிருக்கும் பணம் தின்னிக் பிசாசுகள் மற்றும் அத்தனைக்கும் ஆதரவாக இருக்கும் அயோக்கிய அரசியல்வாதிகள் என அத்தனை பேரின் சொத்துக்களையும் அதிரடியாகப் பறிமுதல் செய்து, இதைவிடக் கூடுதலாகவே நஷ்டஈடு கொடுக்கப்பட வேண்டும்.

Kallakurichi Illicit Liquor Deaths | கள்ளக்குறிச்சி சாராய மரணம்…

பின்குறிப்பு: மாறி மாறி கள்ளக்குறிச்சிக்குப் படையெடுத்துச் சென்று, மலர்வளையம் வைத்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் எந்தவோர் அரசியல் கட்சிக்கும், இந்தக் கள்ளச்சாராயத்துக்கு எதிராகப் பேச துளிகூட அருகதையே இல்லை. டாஸ்மாக்கை உருவாக்கிய கட்சி… அதை உருமாற்றி மாற்றி தரம் உயர்த்திய கட்சி என அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இரண்டும்தான் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன. இங்கே… இப்போது ஒப்பாரி வைப்பதுபோல நடிக்கும் அத்தனை கட்சிகளுமே மாறிமாறி இவர்களுக்குக் காவடி தூக்கிய/தூக்கிக் கொண்டிருக்கும் கட்சிகள்தானே – சீமான் மற்றும் விஜய் தவிர. அப்படியிருக்க, நியாயப்படியும்… தர்மப்படியும் அத்தனைக் கட்சிகளுமே குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியவையே!

– அவள்

#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச் சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்’. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.