கள்ளச்சாரயத்துக்கு தீர்வு கள் ஒன்றுதான்; வெடிக்கும் ‘கள்’ நல்லசாமி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர் இறந்த நிலையில், இதை கருத்தில் கொண்டாவது பனை தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் நலனை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கான  தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது தொடர்பாக நம்மிடையே பேசிய தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி, “பீகாரை பின்பற்றி தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் கள்ளச்சாராயம் மூலம் மரணங்கள் ஏற்பட்டன. ஆனால், அதற்கு நிவாரணம் கொடுப்பது கள்ளசாராயத்தை ஊக்குவிப்பதுபோல் இருக்கும் என்று அந்த அரசு எந்த நிவாரண தொகையையும் வழங்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது தவறான முன்னுதாரணமாக இருக்கிறது.

பனை மரங்கள்

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு கள் தொடர்பான எந்தவித  புரிதல்களும் இருப்பதாக தெரியவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போன்றோர் கள் இறக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவேண்டும் என்கிறார்கள். கள் இறக்குவதற்கு எதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். கள் ஒரு உணவு பொருள். போதைப்பொருள் இல்லை. கள் இறக்குவது உரிமை என்று அரசியலமைப்பு சட்டம் மூலம் தெளிவாகிறது. தமிழ்நாடு அரசு இந்த உரிமையை பனை தொழிலாளர்களிடம் இருந்து பறித்துக்கொண்டது. உலக நாடுகள் ஏன், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில்கூட கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம்  என்ன என்பதை நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டபோது, ‘கள்ளில் கலப்படம் அதிகம் இருக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை’ என்கிறது அரசாங்கம். அண்டை மாநிலங்களில் கலப்படத்தை கட்டுப்படுத்துகிறபோது  தமிழ்நாட்டில் ஏன் முடியவில்லை.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கள்ளில் இருக்கின்றன. கள்ளுக்கு தடைவிதிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று கள்ளச்சாராயத்திற்கு பல உயிர்கள் பலியாகாமல் இருந்திருக்கும்.

பனை, ஈச்சம், தென்னை மரங்களிலிருந்து இளநீராகவோ, பதநீராகவோ, கள்ளாகவோ இறக்கி குடித்தும், விற்றும் கொள்ளலாம். இவற்றை மதிப்புக்கூட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைப்படுத்தி கொள்ளலாம். அரசின் தலையீடு மற்றும் குறுக்கீடு இருக்காது. அதே நேரத்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புகளுடன் கள்ளுக்கான தடை நீக்கப்பட்டால், பாட்டில்கள் மற்றும் டின்களில் அவற்றை அடைத்து நட்சத்திர விடுதிகள், சர்வதேச விமான நிலையங்களில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்தால் அந்நிய செலாவணி அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். அதிகளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்.

நல்லசாமி

சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது. இவ்வளவு பலன்கள் இருக்கிறபோது கள்ளுக்கு ஏன் அரசு தடை விதிக்க வேண்டும். எனவே அரசியலமைப்பு சட்டத்தை மதித்து உடனே அரசு கள் தடையை நீக்க வேண்டும். கள்ளை உணவாக அறிவிக்க வேண்டும். மக்கள் செம்மறி ஆடுகளாய் இருக்கின்ற வரையில் ஆட்சியாளர்கள் ஓநாய்களாய்த்தான் இருப்பார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செய்தியாளர் கு.செந்தில்குமார். “கள் தமிழர்கள் பாரம்பரியமாக குடித்து வந்த பானமாகும். உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது அறிவியல் உண்மை. இதை அதிகளவிலும் குடிக்க முடியாது. மேலும் கள்ளச்சாராயங்களில் உள்ளது போன்ற எந்த ரசாயனங்களும் இதில் இல்லை. கள்ளுக்கான தடையால் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கள்ளச்சாராயமும் அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுவில் எந்த அளவிற்கு ரசாயன தன்மை இருக்கிறது.

செந்தில்குமார்

அது தொடர்ந்து சோதிக்கப்படுகிறதா என்பதும்  கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், கள் நமக்கு இயற்கையாகவே கிடைக்கிறது. அதை விற்பனை செய்யும்போது கலப்படம் இல்லாமல் இருக்கிறது என்பதை  அரசு பார்த்துக் கொண்டால்  போதுமானது. கள் இறக்குவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதே  நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும்” என்றார்.