ஒன் பை டூ: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பயப்படுகிறதா அ.தி.மு.க?

பழ.செல்வகுமார்

பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க.

“ஒரு பிரதான எதிர்க்கட்சி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது என்றால், பயத்தைத் தாண்டி வேறு என்னவாக இருக்க முடியும். எப்படியும் இந்தத் தேர்தலில் தோல்வி நிச்சயம். அதனால், ‘பத்து தோல்வி பழனிசாமி’ என்றிருக்கும் பெயர், ‘பதினோரு தோல்வி பழனிசாமி’ என்று மாறிவிடுமோ என்கிற பயத்தில்தான் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி. இதில் இன்னொரு கணக்கும் இருக்கிறது. அதாவது, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க மிகவும் வலுவாகவே இருக்கிறது. இருந்தபோதிலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கணிசமான வாக்குகளை வாங்கியிருந்தது. மூன்றாவதாக வந்த கட்சிக்கும் அ.தி.மு.க-வுக்குமே பெரிய எண்ணிக்கை வித்தியாசம் இருந்தது. அந்த வாக்குகளை அ.தி.மு.க இப்போது யாருக்கு விட்டுக்கொடுக்கிறது… பா.ஜ.க-வுக்கு. ‘பா.ஜ.க-வுடன் திரைமறைவில் கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறது அ.தி.மு.க’ என்று நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறோம். இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்திருப்பதன் மூலம், பா.ஜ.க கூட்டணிக்கு அ.தி.மு.க உதவுகிறது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. அ.தி.மு.க, பா.ஜ.க என்று இந்தத் தேர்தலை யார் சந்தித்தாலும், எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் வாங்குவதுகூட சிரமம்தான். என்றாலும், இந்தத் தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்திருக்கும் வகையில், அந்தக் கட்சித் தலைமை தன் தொண்டர்களுக்குத் துரோகம் செய்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!”

செ.கிருஷ்ணமுரளி

செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

“எதற்கும் அஞ்சாத கட்சி அ.தி.மு.க. ஓர் இடைத்தேர்தலைச் சந்திக்கவா பயப்படப்போகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க அரசு என்ன செய்தது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். ஏதோ ஆடு, மாடுகளை அடைப்பதுபோல மக்களைப் பட்டிகளில் அடைத்துப்போட்டு ஜனநாயகப் படுகொலை செய்தது தி.மு.க. ஒட்டுமொத்த அமைச்சர்களையும் களத்தில் இறக்கி சகட்டுமேனிக்கு விதிமுறை மீறல்களிலும் அராஜகத்திலும் ஈடுபட்டது. எந்த முறைகேடுகளும் இல்லாமல் தேர்தல் நடைபெறும் என்றால் அ.தி.மு.க தேர்தலைச் சந்தித்திருக்கும். ஆனால், ஈரோடு கிழக்கு போலவே இந்த இடைத்தேர்தலிலும் அதிகார துஷ்பிரயோகத்தில் தி.மு.க ஈடுபடும். உண்மையில் இந்த இடைத்தேர்தல் காலவிரயம்தான். தி.மு.க ஆட்சியின்போது, அ.தி.மு.க வெற்றிபெற்ற இடைத்தேர்தல்களும் உண்டு. அதேபோல, அ.தி.மு.க காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட்கூட வாங்காத தேர்தலையும் தமிழகம் பார்த்திருக்கிறது. அவ்வளவு ஏன், தி.மு.க எத்தனையோ இடைத் தேர்தல்களைப் புறக்கணித்த வரலாறும் இருக்கிறது. அ.தி.மு.க தலைமை மட்டுமன்றி, அ.தி.மு.க தொண்டர்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்!”