கள்ளச்சாராய பலிக்களம்; கள்ளக்குறிச்சிக்கு `நோ’ சட்டசபைக்கு `லேட்’ – ஒளிந்துகொண்டாரா முதல்வர்?!

இன்றைய தேதிக்கு தேசிய அளவில் பேசுபொருளாக இருப்பது தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்திருக்கும் கள்ளச்சாராய மரணம்தான். 150-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். சட்டசபை கூடும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி சமீபத்தில் கட்சி ஆரம்பித்த விஜய் வரை என பல்வேறு அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதே சமயத்தில், அரசு சார்பில் மூத்த அமைச்சர் ஏ.வ.வேலு, உதயநிதி உட்பட அமைச்சர்கள் பட்டாளமும் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருக்கிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. நேற்று முந்தினம் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி சென்றிருந்த சமயத்திலேயே உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இதேபோல கள்ளச்சாராயம் தொடர்பான மரணம் ஏற்பட்ட சம்பவத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சென்று சந்தித்திருந்தார். இந்தமுறை அதைவிடப் பல மடங்கு நபர்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இவ்வளவு நடத்தும் இதுவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்லவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. சட்டசபை நடப்பதால் முதல்வர் ஸ்டாலின் அங்கு நேரில் செல்லவில்லை. ஆனால், அமைச்சர்களை நேரில் அனுப்பி அங்குள்ள நிலைமையை முதல்வர் கேட்டறிந்தார் என்று முதல்வர் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.

“ஒரு பேரிடர், விபத்து என்றால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்கவேண்டிய கடமை மாநிலத்தின் முதன்மை பொறுப்பில் உள்ள முதல்வருக்கு உண்டு. முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை தோல்வியின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கும் முதல்வர் நேரில் சென்று பார்க்காமல் இருப்பது சரியா?” என்று கேள்வியெழுப்புகிறது எதிர்க்கட்சிகள்.

இந்தளவுக்குப் பரபரப்பான சூழலில் இந்தாண்டின் இரண்டாவது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் அதிமுக கள்ளச்சாராய மரணம் குறித்துக் கேள்வியெழுப்பும் என்று எதிர்பார்க்கப் பட்டது. அதுபோலவே, பேரவை கூடியதும் கள்ளச்சாராய மரணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேச முற்பட்டார். அவரை குறுக்கிட்டுப் பேசிய பேரவைத் தலைவர் கேள்வி நேரம் என்பதால் விதிகளுக்கு மாறாகப் பேச அனுமதிக்க முடியாது. பிறகு பேச அனுமதிப்பதாகவும் தெரிவித்தார். இருந்தபோதிலும் அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதிக்கும்படி அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேரவையில் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சபையில் அமளி ஏற்பட்ட நிலையில் அதிமுக உறுப்பினர்களைச் சபையிலிருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவை காவலர்கள் ஆர்.பி உதயகுமார் உட்படப் பலரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும், நேற்று ஒருநாள் பேரவையில் பங்கேற்கத் தடையும் விதித்திருந்தார் சபாநாயகர் அப்பாவு.

வெளியேற்றப்பட்ட அதிமுகவினர்

பேரவைக்கு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, பத்திரிகையாளர்களிடம் “உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்துப் பேச அனுமதி கேட்டும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. நாட்டையே உலுக்கிய சம்பவத்தால் மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இதுகுறித்து பேச அனுமதி வழங்கவில்லையென்றால் நாங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதுக்கே அர்த்தமில்லை. பேரவைத் தலைவர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார். பேரவையில் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவை தலைவரின் செயல்பாடு எங்களுக்கு வருத்தமாக உள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலையாகும். இது ஹிட்லர் ஆட்சி போன்ற சர்வாதிகார ஆட்சியாகும். திறனற்ற அரசு, பொம்மை முதல்வர் இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இந்த குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். மருத்துவமனையில் நடைபெறும் சிகிச்சை குறித்து வெளிப்படைத் தன்மை வேண்டும். இதற்கு அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும். அவையில் பேசும்போது முதல்வர் வரைகூட இல்லை” என்று மிகவும் காட்டமாகப் பேசியிருந்தார். எதிர்க்கட்சி தலைவர் சொல்வதுபோலவே, அதிமுகவினர் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது முதல்வர் ஸ்டாலின் அவையில் இல்லை. அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகுதான் முதல்வர் ஸ்டாலின் அவைக்கு வந்து சேர்ந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நடந்த சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்று பேசினார்கள். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல முதல்வர் என்ற முறையிலும் எந்த பிரச்னையிலிருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டு தான் உங்களுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன். எதிர்க்கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில், போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது என்பதை மக்கள் மறந்துவிடவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்த பட்டியல் என்கையில் இருக்கிறது. அதைவைத்து அரசியல் பேச விரும்பவில்லை நான். இந்தத் துயரமிகு சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சட்டமன்றம் முதல்வர் ஸ்டாலின்

இந்த சட்டசபை ஜனநாயக முறையில் நடைபெறவேண்டும் என்று விரும்புகிறேன். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். முதல்வராக, அமைச்சராக இருந்தவர்கள் சபையில் நடந்துகொண்ட விதம் தவிர்த்திருக்க வேண்டும். பேரவை விதி 120-ன் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதில் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. இருந்தபோதிலும், என் வேண்டுகோளாக, மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின் பிரதான எதிர்க்கட்சி பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தார் முதல்வர்.

இதனைத் தொடர்ந்து “வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்க அனுமதி அளித்து மீண்டும் அவைக்கு வர உத்தரவிட்டிருந்தார் அவைத்தலைவர். ஆனாலும், வெளியேறிய எதிர்க்கட்சியினர் சட்டசபையிலிருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

“ஓடி ஒளிப்பவன் இல்லை நான் என்று சொல்லும் முதல்வர், முன்பாகவே சபைக்கு வந்திருக்க வேண்டாமா… திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் வெளியேறியபிறகு அவைக்கு வருவதற்கு என்ன அர்த்தம். இன்னும் முதல்வர் கள்ளக்குறிச்சிக்கும் செல்லவில்லை. காரணம் அங்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் எதிர்கொள்ள முடியாதது என்பது மட்டுமே” என்று குற்றம் சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88