மேயருக்கு எதிராகப் புகார்!
புதிதாக அறிவிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில் கவுன்சிலராகப் போட்டியிட மகாலட்சுமி யுவராஜ் மேயராக அறிவிக்கப்பட்டார். இருந்தபோதிலும், மகாலட்சுமிக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த சூர்யா என்பவர் மேயர் போட்டியில் களமிறங்க, அப்போதே களம் சூடுபிடித்தது. எனினும் தலைமை அறிவித்தபடியே மகாலட்சுமி யுவராஜ் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார். இருந்தபோதிலும், புதிய மாநகராட்சி, அரசியலுக்குப் புதிது என்பதால் காஞ்சிபுரத்தில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்தது.
மாநகராட்சியில் மேயருக்கும் மாநகராட்சி ஆணையருக்கு மோதல் போக்கு நீடிப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், ஆணையராக இருந்த கண்ணன் மாற்றப்பட்டர் என்றும் கூறப்பட்டது. அடுத்ததாக ஆணையராக வந்த செந்தில் முருகன் என்பவர் மேயர் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன. அதேபோல, கவுன்சிலர்களுக்கு ஆணையர் தரப்பில் எந்த உதவியும் வருவதில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த நிலையில், மேயர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரச் சொல்லி திமுக கவுன்சிலர்கள் உட்பட 30 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
தலையிட்ட தலைமை!
மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று சொல்லி 17 திமுக கவுன்சிலர்கள், ஏழு அதிமுக கவுன்சிலர்கள், ஐந்து சுயேச்சை கவுன்சிலர்கள், இரண்டு பாமக கவுன்சிலர்கள் உட்பட மொத்தம் 33 பேர் புகார் மனு கொடுத்திருந்தனர். இதன் காரணமாக மாமன்ற கூட்டம் போடமுடியாத நிலை நீடித்தது. திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக தலைமை தலையிட்டது. அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு முன்வைத்த கவுன்சிலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமைச்சர் நேருவின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புகார் தெரிவித்த கவுன்சிலர்கள், திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்துக் கலந்துகொண்ட சிலரிடம் பேசினோம், “கவுன்சிலர்கள் சிலர் மேயர் எங்களுக்கு மரியாதையைக் கொடுப்பதில்லை. மாநகராட்சியின் மேயரின் கணவர் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. ஆணையர் மேயருக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுகிறார். நாங்கள் ஏதாவது கூறினாலும் செய்துகொடுப்பதில்லை’ என்றிருக்கிறார்கள்.
விடாப்பிடியாக கவுன்சிலர்கள்!
அதற்கு மேயர் தரப்பிலும் பதில் சொல்லப்பட்டது. மாவட்டச் செயலாளரிடமும் என்ன நடந்தது என்பதை விரிவாகக் கேட்டிருக்கிறார். அனைத்து தரப்பினர் பேசியதையும் கேட்டுக்கொண்ட அமைச்சர் கடைசியாக மேயரை சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அதேபோல, கவுன்சிலர்களிடமும் எப்படியெல்லாம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடாது. அனைவரும் சென்று பணியைப் பாருங்கள். ஏதாவது பிரச்னை என்றால் என்னிடமோ, மாவட்டச் செயலாளரிடமோ அல்லது எம்.எல்.ஏ-விடம் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பிவைத்தார்” என்றார்கள்.
அமைச்சர் அழைத்துப் பேசியும் சமாதானமாகாத கவுன்சிலர்கள் 20 பேர் மீண்டும் மேயராக மகாலட்சுமி தொடர்ந்தால் நாங்கள் ராஜினாமா செய்வோம் என்று சொல்லி மாவட்டச் செயலாளர் சுந்தரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இந்த கடிதத்தைத் தொடர்ந்து, குற்றச்சாட்டு முன்வைத்த கவுன்சிலர்களை அழைத்து காஞ்சிபுரத்தில் கூட்டம் நடத்தியிருக்கிறார். அந்த கூட்டத்திலும் கவுன்சிலர்களின் குறைகளை மீண்டும் கேட்டு அனைத்தையும் சரி செய்வதாகச் சொல்லிச் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். இருந்தபோதிலும் கவுன்சிலர்கள் விடாப்பிடியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் எப்படியாவது பேசி கவுன்சிலர்களை சரிக்கட்டும் வேலைகள் மேயர் தரப்பிலும், மாவட்டச் செயலாளர் தரப்பிலும் பணிகள் தடதடக்கின்றன.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88