`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது’ – மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 40 பேர் உயிரிழந்ததும், இன்னும் பலர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிவருவதும் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிரோதமாக விற்கப்படும் இந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டிருப்பதே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முழு மதுவிலக்கை அமல்படுத்துவதே இதற்கான நிரந்தரத் தீர்வு என தமிழ்நாடு அரசுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி… கள்ளச்சாராயம்

இதுகுறித்த அறிக்கையில்., “கள்ளக்குறிச்சியில் ‘மெத்தனால்’ என்னும் அடர் ஆல்கஹால் கலந்த சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனைக் குடித்த அப்பகுதிகளைச் சார்ந்த 140-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரவலம் நாட்டைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் குரூரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

மெத்தனால் என்னும் நஞ்சு கலந்த கள்ளச்சாராயம் கூடுதல் போதை அளிப்பதாகச் சொல்லி, சட்டத்துக்கு விரோதமாக ஒரு கும்பல் இந்த வணிகத்தில் ஈடுபட்டுவருகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த நச்சு சாராயத்தைக் குடித்து 22 பேர் உயிரிழந்தனர் என்பதை நாடறியும். அந்த நேரத்தில் ‘மெத்தனாலின் கள்ள வணிக நடமாட்டத்தைக் கண்காணிப்போம்; இந்த கள்ளச்சந்தையில் ஈடுபட்டுவரும் மஃபியா கும்பலின் சட்டவிரோத கட்டுப்படுத்துவோம்’ என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அவ்வாறு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாமே என்னும் கவலை மேலோங்குகிறது.

திருமாவளவன்

இனியாவது மெத்தனாலின் கள்ளவணிகத்தோடு தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையவாதமாக இல்லை என்பதை இத்தகைய சாவுகள் உறுதிப்படுத்துகின்றன. அரசின் ‘டாஸ்மாக் ‘ மதுக்கடைகளில் தொடர்ந்து மது அருந்தி போதைப்பழக்கத்திற்கு ஆளாகி மீளமுடியாத அடிமைகளாக மாறியவர்கள்தாம், அரசின் மதுவிலுள்ள போதை பற்றாத நிலையில் இத்தகைய நச்சு கலந்த கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர்.

எனவே, அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள்தாம் மதுபோதை அடிமைகளை உருவாக்குகிறது என்பதுவும் அதன் காரணமாகவே கூடுதல் போதைக்கான கள்ளச்சாராயத்துக்கு வழி வகுக்கிறது என்பதுவும் நாம் உணரவேண்டிய உண்மைகளாக உள்ளன. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு மாநில அரசுக்கான வருவாய் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், குடி நோயாளிகளால் மாநிலத்துக்கு ஏற்படும் மனிதவள இழப்பு, அவர்களால் மாநில அரசுக்கு ஏற்படும் சுகாதார செலவினச் சுமை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மதுக்கடைகளின் மூலம் வரும் வருவாயை விட இந்த இழப்பு அதிகம் என்பதை உணரலாம்.

ஸ்டாலின்

எனவே, மதுக்கடைகள் நடத்துவதற்கு வருவாய் ஒரு காரணமாக சொல்லப்படுவது ஏற்புடையதாக இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வி.சி.க சார்பில் வலியுறுத்துகிறோம். முழு மதுவிலக்கு என்பதில் தி.மு.க-வுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தி.மு.க இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமல்ல; இந்திய ஒன்றிய அரசுக்கும் உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ( Directive Principles) அதுகுறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படியே, 1954-ல் இந்திய அரசின் திட்டக்குழுவின் சார்பில் `மதுவிலக்கு விசாரணைக் குழு’ என ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 1955 செப்டம்பர் 10 ஆம் நாளன்று அறிக்கையை சமர்ப்பித்தது.

*மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் தெளிவான ஒரு கால வரையறையை அறிவித்து அதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

*ஒன்றிய அரசின் மதுவிலக்குத் திட்டங்களுக்கு முழுமையாக மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றிய அரசானது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதன் மூலமாக மதுவிலக்கை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்;

ஸ்டாலின் – மோடி

*1958 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய அளவில் இதற்கென சட்டம் ஒன்று இயற்றப்பட்டு அது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் உள்ளன. அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்திருந்தால் மனிதவள இழப்புகளிலிருந்து இந்தியா மீண்டிருக்கும். எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கும். எனவே, இப்போதாவது அக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், நச்சு சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதை விடவும் முழுமையான மதுவிலக்கின் தேவை குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதை மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.