கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசும், கிரேக்க கோடீஸ்வரருமான அல்கி டேவிட், ஹாலோகிராஃப் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மாடலாக ஜேன் டோ என்ற பெண் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஜேன் டோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பான மனுவில், “அல்கிடேவிட் அவர் நிறுவனத்தில் நான் பணிபுரிந்த மூன்று ஆண்டுகளில், என்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 900 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜேன் டோவின் வழக்கறிஞர்,“ 2016 – 2019-க்கு இடையில் மூன்று ஆண்டுகளாக அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
இவர்மீது ஏற்கெனவே பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு நடந்து வந்த சமயத்தில்தான், என் கட்சிக்காரரையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை வழக்கின் வரலாற்றில் மிகப்பெரிய தீர்ப்புகளில் ஒன்று இது. இவ்வளவு நஷ்ட ஈடு யாருக்கும் கொடுத்தது கிடையாது. அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல பாலியல் தொல்லை தொடர்பான வழக்குகளை அவர் எதிர்க்கொண்டிருக்கிறார்.” எனத் தெரிவித்திருக்கிறார்.