`கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்; ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா?’ – பிரேமலதா கேள்வி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். தி.மு.க அமைச்சர்கள், அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க தலைவர்கள் என பலரும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து இரங்கலும் ஆறுதலும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்

மறுபக்கம், ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் எனப் பலரை மாற்றியிருக்கும் தி.மு.க அரசு, உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய முதல்வரே ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறாரா என கேள்வியெழுப்பியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “சிகிச்சையில் இருப்பவர்களிடம் எதற்காக இதைக் குடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, விலை மலிவாகக் கிடைத்ததால் குடித்தோம் என்றார்கள். முதல்வர் ஆட்சிக்கு வந்த புதிதில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் லட்சியம் என்று கூறியிருந்தார். ஏற்கெனவே, மரக்காணம் போன்ற இடங்களில் இதேபோன்று கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது, கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று ஸ்டாலின் கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த்

ஆனால், இன்று இத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் இந்த அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது. அனைத்தும் கண்துடைப்பு நாடகம். முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை. இதுபோன்ற சம்பவங்களில் பலிகடா ஆவது அதிகாரிகள் மட்டும்தான். கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவிக்கிறார். அப்படியென்றால் கள்ளச்சாராயத்தை முதல்வர் ஊக்குவிக்கிறாரா… இது தவறான முன்னுதாரணம்.

ஸ்டாலின்

அதிகாரிகளை மாற்றுவதோ, ரூ.10 லட்சம் கொடுப்பதோ இதற்குத் தீர்வல்ல. அரசும், காவல்துறையும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களோடு கைகோத்துக்கொண்டு ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர, தடுப்பதில்லை. கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்ததால்தான் உங்களுக்கு (திமுக) வாய்ப்பு கொடுத்தார்கள். அதனுடன் ஒப்பிடுவதற்காக முதல்வருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அடுத்தவர்கள்மீது பழிபோடுவதால் மக்களுக்கு விடிவு கிடைக்காது. இதற்கு என்ன தேர்வு என்பதை அரசு யோசித்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.