ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்… வெளிநாட்டு ஆர்டர்களால் பிஸியான திருப்பூர்..!

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித் தொழில் விளங்குகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அளவில் 50 சதவீத நூற்பாலைகள் உள்ள மாநிலமாகவும், அதிக பின்னலாடை உள்ளிட்ட ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருகிறது. இதன் காரணமாக இந்திய அளவில் ஜவுளித் தொழில் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது.

திருப்பூர் பின்னலாடை

ஜவுளி ஏற்றுமதி தொடர்பாக அண்மையில் வெளியான அறிக்கையின்படி, 2023-2024 நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளிப் பொருள் ஏற்றுமதி 34.43 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் தமிழகம் 20.78 சதவீதம் 7.15 பில்லியன் டாலர் ஏற்றுமதியுடன் முதலிடத்தை வகிக்கிறது. குஜராத் 15.36 சதவீதத்துடன் (5.29 பில்லியன் டாலர்) இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது.

தொடர்ந்து மகாராஷ்ட்ரா 11.54 சதவீதம் (3.97 பில்லியன் டாலர்), ஹரியாணா 10.52 சதவீத (3.62பில்லியன் டாலர்), உத்தரப் பிரதேசம் 9.87 சதவீதம் (3.40 பில்லியன் டாலர்), கர்நாடகா 7.64 சதவீதம் (2.63 பில்லியன் டாலர்), ராஜஸ்தான் 4.64 சதவீதம் (1.60 பில்லியன் டாலர்), பஞ்சாப் 4.11 சதவீதம் (1.41 பில்லியன் டாலர்), மத்தியப் பிரதேசம் 3.81 சதவீதம் (1.31 பில்லியன் டாலர்), டெல்லி 2.99 சதவீதம் (1.03 பில்லியன் டாலர்), மேற்குவங்கம் 2.54 சதவீதம் (0.87 பில்லியன் டாலர்), ஆந்திரம் 1.34 சதவீதம் (0.46 பில்லியன் டாலர்) ஜவுளி ஏற்றுமதியில் பங்களிப்பை அளித்துள்ளன.

சுப்பிரமணியன்

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், “கொரோனா தாக்குதலால் திருப்பூரின் ஜவுளித் தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த 4 ஆண்டுகளில் பெரிதாக வெளிநாட்டு ஆர்டர்களும் வரவில்லை. ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது. இந்தியாவுக்கு போட்டி நாடுகளான பங்களாதேஷில் தொழிலாளர்கள் பிரச்னை, சீனா ஜவுளிக் கொள்கைகளால் பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிலும் குறிப்பாக திருப்பூருக்கு கொரோனாவுக்கு முந்தைய நிலை போன்று அதிக அளவிலான ஆர்டர்கள் வரத் தொடங்கி உள்ளன.

கடந்த ஆண்டு திருப்பூரின் ஜவுளி ஏற்றுமதி ரூ.33 ஆயிரம் கோடியாகவும், உள்நாட்டு வர்த்தகம் ரூ.27 ஆயிரம் கோடியாகவும் இருந்தது. தற்போது, திருப்பூர் பழைய நிலைமைக்குத் திரும்பி உள்ளதால், வரும் ஆண்டில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவீதம் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியமும், ஏற்றுமதி ஊக்கத் தொகையும் வழங்க மத்திய அரசு முன் வர வேண்டும். சீனாவில் இருந்து வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு அதிகப்படியான ஜவுளிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதைத் தடுக்க வங்கதேச ஜவுளிகளுக்கு இறக்குமதி வரியை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.

முத்துரத்தினம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறுகையில், “பின்னலாடைத் தொழில் 90 சதவீதம் சிறு, குறு நிறுவனங்களை நம்பித்தான் இயங்கி வருகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களை நம்பிதான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். 10 சதவீதம்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. கொரேனா, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மின் கட்டண உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் கடந்த 10 ஆண்டுகளில் பின்னலாடைத் துறையில் இருந்த 50 சதவீத சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

மத்திய, மாநில அரசுகளும் சிறு, குறு நிறுவனங்களைக் கண்டுகொள்வதாக இல்லை. அவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டும்தான் சலுகைகளை வழங்குகின்றனர். குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களைப்போல தமிழகத்திலும் ஜவுளித் தொழில் துறைக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பின்னலாடைத் துறை மூலப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும். நலிவடைந்த சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பின்னலாடைத் துறை மேலும் வளர்ச்சி அடையும்” என்றார்.