மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை இதற்கு முன்னிருந்த ஆளுநர் ஜெக்தீப் தன்கரும் சரி (தற்போதைய துணை குடியரசுத் தலைவர்), தற்போதைய ஆளுநர் சி.வி.ஆனந்த போஸும் சரி, மாநில அரசுடன் அடிக்கடி மோதல் போக்குடனே செயல்பட்டு வந்தனர். முதல்வர் மம்தா பானர்ஜியும் அவ்வாறே செயல்பட்டு வந்தார். இத்தகைய சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் இருக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி உட்பட அனைவரும் வெளியேற ஆளுநர் ஆனந்த போஸ் உத்தரவிட்டிருந்தார்.
அதோடு, மாளிகைக்கு வெளியே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தைப் பொதுமக்களின் மேடையாக மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் ஆனந்த போஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் மாநில காவல்துறையால் தனக்கு பாதுகாப்பு இல்லை என ஆனந்த போஸ் இன்று கூறியிருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் இதனைத் தெரிவித்த ஆனந்த போஸ், “தற்போதைய பொறுப்பு அதிகாரி மற்றும் அவரின் குழு ஆளுநர் மாளிகையில் இருப்பது எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று நம்புவதற்கு எனக்கு காரணங்கள் இருக்கின்றன. அதோடு, ஆளுநர் மாளிகையில் கொல்கத்தா போலீஸிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.
மேலும், ஆளுநர் மாளிகையில் பணியமர்த்தப்பட்ட போலீஸார் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாநில அரசிடம் அவர் புகாரளித்திருப்பதாகவும், வெளியிலிருக்கும் செல்வாக்குமிக்கவர்களின் உத்தரவால் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சந்தேகிப்பதாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.