`தமிழ்நாட்டில் 3 வகையான மது விற்பனை… பலியான உயிர்களுக்கு முதல்வர் ஸ்டாலினே பொறுப்பு!’ – ராமதாஸ்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் நேற்றுமுதல் 30-க்கும் ,ஏற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 70-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கள்ளச்சாராய மரணம்

சென்ற ஆண்டே இது போன்ற நிகழ்வு நடந்தபோதும் முறையான நடவடிக்கை எடுக்கத் தவறிய தி.மு.க அரசு, இந்த ஆண்டும் கள்ளச்சாராயத்துக்கு பொதுமக்களை காவுகொடுத்து வேடிக்கை பார்க்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் பலியான குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் மூன்று வகையான மது விற்கப்படுவதாகவும், பலியான உயிர்களுக்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்த அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது, பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராமதாஸ்

கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படு்கிறது. ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில்தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன. சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்ததுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.

கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிலிருந்து தமிழ்நாடு அரசு பாடம் கற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மது வணிகம் செய்பவர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் முதலில் விளக்கமளித்தார். தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சிதான் இது.

ஸ்டாலின்

கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது. கள்ளச்சாராயத்தை மட்டுமல்ல… டாஸ்மாக் மதுவை குடித்துவிட்டு அட்டகாசம் செய்யும் குடிகாரர்களைக்கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நாள்களுக்கு முன் கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் ஒரு குடிகாரர் தவறாக நடந்திருக்கிறார். அதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண்மணி புகார் அளித்தும் குடிகாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்த பெண்ணை சமாதானப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளது. கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb