Sagar Eshwar: தந்தை தோல்விக்கு பழிதீர்த்த மகன் – யார் இந்த 26 வயது இளம் எம்பி சாகர் ஈஷ்வர் காந்த்ரே?

நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவின் 28 இடங்களில் பா.ஜ.க 17 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றியது. ஜனதா தளம் (மதச்சார்பற்ற) இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கர்நாடகாவின் பிதார் மக்களவைத் தொகுதியிலில் போட்டியிட்ட காங்கிரஸின் 26 வயது இளம் வேட்பாளர் சாகர் ஈஷ்வர் காந்த்ரே, இரண்டு முறை பா.ஜ.க எம்.பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பக்வந்த் குபாவை தோற்கடித்து வெற்றிப்பெற்றிருக்கிறார்.

ஈஷ்வர் காந்த்ரே – மல்லிகார்ஜுன கார்கேசாகர் – ஈஷ்வர் காந்த்ரே

இவர் 2019 மக்களவைத் தேர்தலில் 1,16,834 வாக்குகள் வித்தியாசத்தில் பக்வந்த் குபா-விடம் தோல்வியை தழுவிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரேவின் மகன். இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாகர் ஈஷ்வர் காந்த்ரே,“இன்றைய சூழலில் நிறைய இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்கினால் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். எனவே மாணவர்களுக்கு திறன் மேம்பாடு செய்வதே முதல் திட்டம்.

விவசாயிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். வரும் நாட்களில், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்.. மக்களை அணுகுவேன்.. என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு சேவை செய்வேன். மாநிலத் தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. நிறைய இளைஞர்களுக்கு இந்த முறை காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கிராமப் பஞ்சாயத்து முதல் மக்களவை வரை ஏராளமான இளைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.