பாஜக IT செல் தலைவர் அமித் மாளவியா மீது RSS நிர்வாகி பாலியல் குற்றச்சாட்டு; விசாரணை கோரும் காங்கிரஸ்!

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) தலைவர் அமித் மாளவியா, நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்க மாநில பா.ஜ.க தேர்தல் பணி மேற்பார்வையாளராகச் செயல்பட்டு வந்தபோது பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி சாந்தனு சின்ஹா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை, சாந்தனு சின்ஹா தனது முகநூல் பக்கத்திலும் இந்தியில் பதிவிட்டிருக்கிறார். இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அமித் மாளவியா, தனது வழக்கறிஞர் மூலம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு சாந்தனு சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அமித் மாளவியா – பாஜக

மேலும் அந்த நோட்டீஸில், இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் அனைத்து பதிவுகளையும் நீக்கி பகிரங்க மன்னிப்பு கேட்குமாறும், அப்படி செய்யவில்லையென்றால் சட்டப்படி கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் சாந்தனு சின்ஹாவுக்கு அமித் மாளவியா தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், அமித் மாளவியாவை பதவியிலிருந்து நீக்கக்கோரி பா.ஜ.க-வை வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ், இதில் உடனடி விசாரணை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்திருக்கிறது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “பா.ஜ.க IT பிரிவு தலைவர் அமித் மாளவியா மோசமான செயல்களில் ஈடுபடுவதாக, பா.ஜ.க நிர்வாகி ராகுல் சின்ஹாவுடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் சாந்தனு சின்ஹா கூறியிருக்கிறார். பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தலில் அமித் மாளவியா ஈடுபட்டிருக்கிறார். நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமல்ல, மேற்கு வங்க பா.ஜ.க அலுவலகங்களிலும் இது நடந்திருக்கிறது. இப்போது பா.ஜ.க-விடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்… பெண்களுக்கான நீதி.

சுப்ரியா ஷ்ரினேட் – காங்கிரஸ்

மோடி பிரதமராகப் பதவியேற்ற 24 மணிநேரத்தில் பா.ஜ.க IT பிரிவு தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறது. அமித் மாளவியாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஏனெனில், இது மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் அதிகாரமிக்க பதவி என்பதால் இதில் சுதந்திரமான விசாரணை நடக்காது. எனவே, பதவியிலிருந்து அவர் நீக்கப்படாத வரை இந்த விவகாரத்தில் நீதி கிடைக்காது. மேலும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் வாய்மூடி வேடிக்கைபார்ப்பவராக இருக்கமாட்டார் என்று நம்புகிறோம். அதோடு, தேசிய மகளிர் ஆணையம் மனசாட்சிப்படி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.