பரபரப்புக்கு பெயர்பெற்ற மதுரை ஆதீனம் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர், திடீர் செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு நன்றி, வாழ்த்துக்கள், ஆசிர்வாதம். தமிழகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். சீமான், அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் எல்லோருக்கும் அளந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரே வருத்தம் இலங்கை தமிழர்களை கொன்றவர்களையும் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுத்திருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழீழம் அமைக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன், மோடி மீண்டும் பிரதமர் ஆனது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தலில் தமிழக மக்களின் முடிவு சரியானது” என்றவரிடம்
“மோடியை நீங்கள் ஆதரிக்க என்ன காரணம்?” என்ற கேள்விக்கு,
“இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார், தமிழீழம் கிடைக்க பிரதமரிடம் வலியுறுத்துங்கள் என சீமான் தரப்பில் என்னிடம் கூறினார்கள்…” என்றார்.
“பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட நூலை வணங்கியுள்ளாரே” என்ற கேள்விக்கு,
“நான் வழங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் எப்போதும் பிரதிபலிக்கிறது. மோடி நாட்டின் சட்டத்தை மதிக்கிறார்” என்றார்.
“பாஜக, கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது” குறித்த கேள்விக்கு,
“காமராஜரையே தோற்கடித்தார்களே… அதுதான் ஜனநாயகம். ஆட்சியில் இருந்தால் திட்டத்தான் செய்வார்கள், திட்டத் திட்ட திண்டுக்கல்லு, வைய வைய வைரக்கல்லு.
ராமகிருஷ்ணரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார்” என்றார்.
“அயோத்தில் பாஜக தோல்வி அடைந்துள்ளதே?”
“அயோத்தியில் பாஜக வென்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள், இது ஜனநாயக நாடு, வெற்றி தோல்வி மக்கள் அளிப்பதுதான், மக்களிடம் பாஜக மீது அதிருப்தி இல்லை. காங்கிரஸ் எத்தனை முறை மாநில கட்சிகளின் ஆட்சிகளை கலைத்துள்ளார்கள், ஆனால் பாஜக அப்படி செய்யவில்லை” என்றார்.
“மோடியை பிடிக்க காரணம்?” என்ற கேள்விக்கு,
“மோடி தியானம் பண்ணுகிறார், ராமகிருஷ்ண மடத்தில் தரையில் படுத்து உறங்கினார், விபூதி அணிகிறார், கடவுள் இல்லை என்று சொல்லாதவர், அதே நேரம் சவுதி அரேபியாவுக்கும் போகிறார்” என்றார் .
“நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளதே?” என்ற கேள்விக்கு
“பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும், நாம் தமிழர் கட்சி சீமான், தனது கட்சியை நன்கு கட்டமைத்து உருவாக்கியிருக்கிறார்” என்றார்.
“இலங்கைக்கு செல்வீர்களா?” என்றதற்கு,
“நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்…” என்றார் அதிரடியாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88