“திருச்சூரில் போட்டியிட்டது நான் செய்த தவறு!” – சுரேஷ் கோபியிடம் தோற்ற காங்கிரஸ் வேட்பாளர் விரக்தி

கேரள மாநில முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகன் கே.முரளீதரன். வடகரா நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி-யாக இருந்தார். இவரின் சகோதரியும், காங்கிரஸ் நிர்வாகியுமான பத்மஜா வேணுகோபால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து வடகரா எம்.பி-யாக இருந்த கே.முரளீதரன் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது கே.முரளீதரனுக்கு பணிஸ்மென்ட் என்ற ரீதியில் விவாதம் எழுந்தது. ஆனாலும், வெற்றிபெறுவேன் என்றார் முரளீதரன்.

ஆனால், சுமார் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சுரேஷ் கோபியிடம் தோல்வியடைந்தது மட்டும் அல்லாது 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார் கே.முரளீதரன். அவரின் தோல்விக்கு காங்கிரஸ் திருச்சூர் மாவட்ட தலைவர் ஜோஸ் வல்லூர் மற்றும் முன்னாள் எம்.பி டி.என்.பிரதால் ஆகியோர்தான் காரணம் என உள்கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டது. மேலும், திருச்சூர் காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் ஜோஸ் வல்லூர் மற்றும் மாவட்டச் செயலாளர் சஜீவன் ஆகியோரது ஆதரவாளர்கள் மாறி மாறி மோதிக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

திருச்சூர் தொகுதியில் வென்ற பா.ஜ.க சுரேஷ்கோபி

மேலும், கோஷ்டி தலைவர்களுக்கு எதிராக போஸ்டர் யுத்தமும் நடந்து வருகிறது. இந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக  கே.முரளீதரன் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் அதிகமான தலைவர்கள் உண்டு. உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் மாறி மாறி அடித்துக்கொண்டால் அது வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். அதன் காரணமாக மோதல் வேண்டாம். மோதலும், போஸ்டர் யுத்தங்களும் நல்லதல்ல.

எனக்கு புதிய பதவி தேவையில்லை. உள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக செயல்படுவேன். அதுவரை ஒதுங்கி இருக்கப்போகிறேன். கேரளாவில் நல்ல வெற்றியை பெற்றுத்தந்துள்ள மாநில தலைவர் கே.சுதாகரனை மாற்ற வேண்டாம். தேர்தலில் போட்டியுடும் மனநிலை இப்போது இல்லை. ராஜ்யசபா எம்.பி பதவி எனக்கு ஒருபோதும் தேவையில்லை. ஒருவேளை ராஜ்யசபா எம்.பி பதவியை நான் ஏற்றுக்கொண்டால் என் உடல் நிலையில் ஏதோ பிரச்னை இருப்பதாக நீங்கள் கருதலாம். திருச்சூருக்கு மத்திய அமைச்சர் கிடைத்தால் நல்லது நடக்கும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. ஆனாலும், காங்கிரஸ் பாரம்பர்ய வாக்குகள் எனக்கு கிடைத்தன. சிலர் மட்டும் நினைத்தால் வாக்குகள் மாறிவிடாது. யாருக்கு எதிராகவும் புகார்கூற நான் விரும்பவில்லை.

திருச்சூர் காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளீதரன்

திருச்சூரில் காங்கிரஸ் தோல்விக்கான காரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் மீண்டும் மோதல் ஏற்படும். காங்கிரஸ் கட்சியினர் சோர்ந்து போகக்கூடாது. தேர்தலில் யாரெல்லாம் பொய் விளையாட்டு விளையாடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் எதிர்காலத்தில் பதிலடி கொடுப்பார்கள். திருச்சூருக்குச் சென்று போட்டியிடாமல் இருந்திருக்கலாம். தவற்றுக்கு நான்தான் காரணம். நான் பா.ஜ.க-வில் இணைவதைவிட வீட்டில் சும்மா இருப்பது நல்லது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88