பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அதாவது மோடி 3.0 ஆட்சி நேற்று பதவியேற்றது. இதற்கு முன்பு மோடி தலைமையில் கடந்த பத்தாண்டுகளாக இருந்த ஆட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆகவே, காட்சிகளும் மாறுபட்டதாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இருக்க முடியாது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை –

ஏனெனில், கடந்த பத்தாண்டு காலத்தில் தனது சொந்த அரசியல் அஜெண்டாக்களை செயல்படுத்தியதைப்போல, மோடி 3.0 ஆட்சியில், பா.ஜ.க-வால் செயல்பட முடியாது. வெறும் 240 எம்.பி-க்களை மட்டுமே வைத்திருக்கும் பா.ஜ.க., சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.

ஆட்சியமைப்பதற்கு முன்பே கடுமையான நிபந்தனைகளை சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் முன்வைப்பதைப் பார்க்கும்போது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மோடி ஆட்சி எப்படி இருக்கும் என்பதை தெளிவாகக் கணிக்க முடிகிறது. கடந்த பத்தாண்டு காலம், மத்தியில் எந்தளவுக்கு அதிகாரத்துடன் பா.ஜ.க இருந்தது… அந்தப் பத்தாண்டு காலத்தில் பா.ஜ.க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளையெல்லாம் எடுத்தது என்பதைப் பார்த்தால்தான், தற்போது அமையும் பா.ஜ.க அரசு எவ்வளவு வித்தியாசப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

மோடி

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014-ல் பிரதமரானவுடன், முன்பிருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலிருந்து வேறுபட்டதாக மோடி ஆட்சி இருந்ததைப் பார்க்க முடிந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்று சொல்லப்பட்டாலும், பா.ஜ.க மட்டுமே அரசின் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது.குறிப்பாக, பிரதமர் மோடியே சர்வ வல்லமை படைத்த சக்தியாக இருக்கிறார், அவருடைய கையில்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.

உதாரணமாக, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திடுதிப்பென்று தொலைக்காட்சியில் அறிவித்தார் மோடி. அந்த நடவடிக்கை குறித்த தகவல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் தவிர அதில் தொடர்புடைய எவருக்கும் தெரியாது என்று சொல்லப்பட்டது.

ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தரப்படும், வேளாண் விளைப்பொருள்களுக்கு விலை நிர்ணயம் தொடர்பான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்றப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் அந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்படவில்லை. அது குறித்து கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எழுப்பின. ஆனால், அந்தத் தேர்தலில், 303 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் பா.ஜ.க அரசு அமைத்தது.

பிரதமர் மோடி

அதன் பிறகுதான், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370 நீக்கப்பட்டது. அக்னிவீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு அதீத அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற இந்துத்துவா அமைப்புகளின் குரல் ஓங்கி ஒலித்தது. பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றை கொண்டுவர முனைப்பு காண்பிக்கப்பட்டது. இப்படியாக, பா.ஜ.க-வின் அரசியல் அஜெண்டாக்கள் தீவிரமான முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தன்னுடைய அரசியல் அஜெண்டாக்களை மூட்டைக்கட்டி வைப்பது என்ற முடிவுக்கு பா.ஜ.க வந்திருக்கிறது. வேறு வழி இல்லை. மோடி 3.0 ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமார் இரட்டைக்குழல் துப்பாக்கி போல இருக்கிறார்கள். அதாவது, இந்த இரட்டைக்குழல் துப்பாக்கியின் முனை பா.ஜ.க அரசை நோக்கியே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த இரண்டு தலைவர்களும் பா.ஜ.க-வுக்கு வைக்கும் நிபந்தனைகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது.

ராகுல் காந்தி

மத்திய ஆட்சியில் முக்கியமான துறைகளை இந்த இரண்டு தலைவர்களும் கேட்டு வலியுறுத்துகிறார்கள். அது மட்டுமல்ல, மக்களவை சபாநாயகர் பதவிக்கு இருவருமே போட்டி போடுகிறார்கள். அப்படியென்றால், சபாநாயகர் பதவி இந்த முறை பா.ஜ.க-வுக்கு இல்லை என்பது தெரிகிறது. அப்படியென்றால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் என இருவரில் ஒருவர்தான் மக்களவையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கப்போகிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட உடனேயே ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. அரசு இல்லத்திலிருந்து ராகுல் காந்தி அதிரடியாக வெளியேற்றப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸின் மஹூவா மொய்த்ரா எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி-யை பயங்கரவாதி என்று ஒரு பா.ஜ.க எம்.பி பகிரங்கமாக நாடாளுமன்றத்திலேயே வெறுப்புப்பேச்சை பேசினார்.

மஹூவா மொய்த்ரா

இப்படியான காட்சிகளை இனி நாடாளுமன்றத்தில் காண முடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்ற அவைகளுக்கு பிரதமர் மோடி முறையாக வருவதில்லை என்ற விமர்சனம் கடுமையாக இருந்தது. நாடாளுமன்றத்துக்கு வரும் மோடி, அவரது அலுவலகத்துக்குச் செல்வாரே தவிர, அவைக்கு வருவது அரிதிரிலும் அரிதாக இருந்தது. அதில் இந்த முறை மாற்றம் இருக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில், அவைக்கு வருவதா, வேண்டாமா என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் பிரதமர் மோடிக்கு மட்டுமே இருக்கிறது. பிரதமர் மோடியின் இந்த தனிப்பட்ட விஷயத்தில் நிதிஷ்குமாரோ, சந்திரபாபு நாயுடுவோ மூக்கை நுழைக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் முக்கிய முடிவுகளை பாஜக அரசு எடுக்கும் முன், கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தும் சூழல் ஏற்படும். முன்னர்போன்று தனிப்பட்ட விதத்தில் முடிவெடுக்க முடியாத சூழலே உள்ளது.

முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ கூட்டணி எம்.பி-க்கள், கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மோடி, இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை தலையில் தொட்டு வணங்கினார்.

இறுதியாகப் பேசிய மோடி, “என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் சமம். கடந்த 30 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக முன்னேறியதற்கும் இதுவே காரணம். இந்திய வரலாற்றில் இது மிகவும் வெற்றிகரமான கூட்டணி. எங்களின் அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே எங்கள் நோக்கம். தென்னிந்தியாவில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை என்.டி.ஏ கூட்டணி அமைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் எங்களால் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அங்கு என்.டி.ஏ கூட்டணியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கேரளாவிலிருந்து முதன்முறையாக ஒரு பிரதிநிதி வந்திருக்கிறார். என்.டி.ஏ என்றால் புதிய இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா, லட்சிய இந்தியா. இந்த நாடு என்.டி.ஏ கூட்டணியை மட்டுமே நம்பியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் என்.டி.ஏ-வுக்கு கிடைத்த வெற்றியை மாபெரும் வெற்றியாக நான் பார்க்கிறேன். எதிர்க்கட்சிகள் எங்களின் வெற்றியை தோல்வி என சித்திரிக்க முயன்றன. ஆனால், நாங்கள் ஒருபோதும் தோல்வியடையவில்லை. 2024 தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே கூறத் தொடங்கிவிட்டன. இது அவர்களின் அதிகாரப் பசியை காட்டுகிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸால் 100 இடங்களைத் தாண்ட முடியவில்லை. இது கடந்த மூன்று தேர்தலிலும் நாங்கள் பெற்ற இடங்களை விடவும் குறைவு. எதிர்க்கட்சிகள் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக செயல்பாட்டில் மக்கள் நம்பிக்கை வைப்பதை நிறுத்த முடிவு செய்திருந்தனர்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சியில் என்.டி.ஏ அரசு கவனம் செலுத்தும். நாட்டுக்காகப் பணியாற்ற முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். அனைத்து நாள்களிலும் 24 மணிநேரமும் என்னைத் தொடர்புகொள்ளலாம். நான் இருப்பேன். நாட்டுக்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.