சர்வதேச நாடுகள் பலவும் உற்றுநோக்கிய உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா முடிந்திருக்கிறது. இத்திருவிழாவின் வெற்றிச்செல்வர்்கள்… வேறு யார்? இந்திய மக்கள்தான். இது, காலங்காலமாக சொல்லப்படுவதுதான். என்றாலும், ஒவ்வொரு கால கட்டத்திலும் அதைச் சொல்லும்போது அழுத்தமான கூடுதல் காரணங்கள் இருக்கும். இம்முறையும் அப்படியே!

கடந்த பத்தாண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த மோடி, மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியிருக்கிறார். தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக… கூட்டாகப் போட்டியிட்ட கட்சிகளுடைய வெற்றியையும் சேர்த்து, அவருக்குத்தான் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள், மக்கள். இந்த வெற்றிக்கு ஊடாக ஓர் அழுத்தமான செய்தியை வெளிப்படையாகவும் விளக்கமாகவும் உலகத்துக்கே புரியும் வகையிலும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்கள். அது, ‘ஒன்றாக இருப்போம்… நன்றாக இருப்போம்’ என்பதுதான்!

பா.ஜ.க-வுடன் கைகோத்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் மட்டும் இணைந்திருப்பதற்கு பெயர், `ஒன்றாக இருப்போம்’ அல்ல. பதவி ஏற்புக்கு முன்பாக, `140 கோடி மக்களுக்கும் ஆட்சி நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்’ என்று மோடியைத் திருப்பிச் சொல்ல வைத்தார்கள் அல்லவா மக்கள்… அதற்குப் பெயர்தான் ஒன்றாக இருப்போம்.

‘மூன்றாவது முறையாக நேருவைப் போல பிரதமர் பதவி ஏற்று இருக்கிறார்’ என்று வரலாற்றுப் பெருமை கொள்வதோடு… ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று அதே நேரு சொன்னதையும் சேர்த்தே உளமாரச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டால்… நிச்சயமாக அனைவருமே ஒன்றாக இருப்போம்… நன்றாகவும் இருப்போம். அதுவே, மாற்றத்துக்கான முதல் விதையாகவும் இருக்கும். பா.ஜ.க மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே நிறையவே இருக்கின்றன.

முதலில் மாநில உரிமைகள்… ‘ஒரே தேசம்… ஒரே கலாசாரம்’ என்ற கருத்துருவாக்கத்தை பா.ஜ.க அனைத்துவிதங்களிலும் முன்னிறுத்தியது. ஒரே தேசமாக இருப்பது வேறு. தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு மாநிலங்களுக்குமான தனிப்பட்ட மற்றும் கலாசாரம் சார்ந்த நலன்கள் தொடர்புடைய விஷயங்கள் வேறு.

ஜி.எஸ்.டி பங்கீடு, வெள்ள நிவாரணம், கல்வி, விவசாயம், மொழி எனப் பல விஷயங்களில் மாநில உரிமைகளில் கை வைத்ததுதான் பிரச்னையே.

அடுத்து மதவாதம்… தேர்தல் பரப்புரையில் மோடியும் அவர் கட்சி வேட்பாளர்களும் வெளிப்படையாக அதிகம் பேசியது மதவாதம் பற்றிதான். ராமர் கோயிலை முன்வைத்து, சிறுபான்மையினரை மிரட்டவே செய்தார்கள். ஆனால், ராமருக்குக் கோயில் கட்டிய அதே அயோத்தி (பைசாபாத்) தொகுதியிலேயே பா.ஜ.க-வுக்குத் தோல்வி. இந்துக்களின் அடையாள பூமிகளில் ஒன்றான வாரணாசி தொகுதியில் முதல் சில சுற்றுகள் மோடியே பின்னடைவைத்தான் சந்தித்தார்.

மதம் தனிப்பட்டவர்களின் பட்டியலில் இருக்கவேண்டிய விஷயம். மனிதம்… பொதுப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கவேண்டிய விஷயம். இதைத்தான் பட்டவர்த்தனமாக உணர்த்தியிருக்கிறது, அயோத்தித் தோல்வி.

கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்தாலும் அவர்களின் குரல் முக்கிய நேரத்தில் ஒலிக்க முடியாத அளவுக்கு பா.ஜ.க-வுக்கு மிருகபலம் இருந்தது. நினைத்த சட்டங்களை நினைத்த நேரத்தில் நினைத்தபடியெல்லாம் மாற்ற முடிந்தது. அதற்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்கள் மக்கள். 234 பேரை எதிரில் உட்கார வைத்துள்ளனர்.

இனி, எதிர்த்தரப்பின் குரலும் சமமாக ஒலிக்கும். நிதானமாகத்தான் போக முடியும். இதையும் மனம் மாறி… மனமுவந்து ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது அரசியல் பக்குவம்.

நாட்டில் எது முக்கியமான பிரச்னை என்பதற்குத்தான் எப்போதுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். `மதுராவிலிருக்கும் மசூதிக்குக் கீழேதான் எங்கள் கிருஷ்ணர் வாழ்ந்தார்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு மீண்டும் கடப்பாரைத் தூக்கினால், வெற்றி என்று பழையபடி கிளப்பிவிடாதீர்கள். `புல்டோசர் புகழ் யோகி ஆதித்யநாத்’ என்று மோடியே புளகாங்கிதமடைந்த அளவுக்கு அத்துமீறிய அத்தனை புல்டோசர்களுக்கும் பூட்டுப் போடுங்கள்.

பங்குச்சந்தையில் உச்சங்களைத் தொட்டுக்கொண்டே இருக்கிறோம். இதனால், தேசம் மொத்தமும் வளர்ந்துவிட்டதா? பொருளாதாரத்தில் உலக அளவில் ஐந்தாம் இடம். ஆனால், 125 நாடுகள் கொண்ட பட்டினி குறியீடு பட்டியலில் 111-வது இடம், பாரதத்துக்கு. நாட்டு மக்களின் பசியைக்கூட போக்க முடியாத வளர்ச்சி, என்ன வளர்ச்சி?

கோடிக்கணக்கான மக்கள் வேலையின்றி உழன்றுகிடக்கிறார்கள். உங்களை நம்பி, தொடர்ந்து உங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் வட இந்திய மற்றும் வடகிழக்கு சகோதரக் கூட்டம், வேலை தேடி தென்னகத்துக்கும் படையெடுக்கிறார்கள்… கூலிகளாக!

`தேனாறும் பாலாறும் ஓடும்’ என்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே சொல்லப்படுவது வாய் வார்த்தைகளாக மட்டுமே இருக்கின்றன. அன்று தொடங்கி, இன்று வரையிலும் மாறிமாறி ஆட்சியைப் பிடிக்கும் உங்களைப் போன்றவர்களின் குடும்பங்களிலும்… உங்களைப் போன்றவர்களுக்கு அனுசரணையாக இருக்கும் குடும்பங்களிலும்… உங்களைப் போன்றோருக்கு சேவை செய்யும் அதிகார வர்க்கக் குடும்பங்களிலும் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது, தேனாறும் பாலாறும். மற்றபடி கோடானுகோடி மக்களின் வீட்டில் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை என்பதே நிதர்சனம்.

கூட்டணிக் கூட்டத்தில் இந்திய அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை வணங்கியபின் பேசிய மோடி, `அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பிலிருந்து வழுவாமல் நடைபோடுவதே என் பணி’ என்று புதுக் குரலில் பேசி இருக்கிறார். `தேர்தல் முடிவுகளுக்கு முன்பு பேசிய மோடியா இது?’ என்று நாடே கிள்ளிப் பார்த்துக் கொண்டது.

`மக்கள்தான் வெற்றிச்செல்வர்கள் எனச் சொன்னது இப்போது புரிகிறதா? இதுதான் இந்திய அல்லது பாரத மக்களாட்சியின் சிறப்பு. இந்தக் கூட்டு மனசாட்சியைப் புறந்தள்ளுபவர்களும் புரிந்து கொள்ளாதவர்களும் இந்த மக்களை இனி ஆள முடியாது. இப்போது ஆளப்போகும் மோடியும் சரி… எதிர்காலத்தில் ஆள்வதற்காக வரவிருக்கும் எவரும் சரி… இதையெல்லாம் உணர்ந்து தங்களை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்.

வீழ்வது யாராயினும்… வாழ்வது நாடாகட்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.