Suresh Gopi: `சினிமாவில் நடித்தே தீருவேன்’ – கேபினெட் பதவி கிடைக்காததால் சுரேஷ் கோபி அதிருப்தியா?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வென்றதை அடுத்து, கேரளாவில் கால் பதித்துள்ளது பா.ஜ.க. இந்தியாவே திருச்சூர் தொகுதியை உற்று நோக்கும் அளவுக்கு அரசியலில் முக்கியத்துவம் பெற்றார் சுரேஷ் கோபி. இதையடுத்து சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க டெல்லி தலைமை முடிவு செய்தது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுரேஷ் கோபிக்கு அழைப்பு வந்ததை அடுத்து, அவர் டெல்லி சென்று மத்திய இணை அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். கேரளாவில் இருந்து டெல்லி புறப்படும் முன்பு செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, “கேரளாவையும் தமிழ்நாட்டையும் கவனித்துக் கொள்ளும் முக்கிய எம்.பி ஆக நான் செயல்படுவேன். 10 முக்கிய துறைகளை செயல்படுத்தும் வகையில் எனக்கு பொறுப்பு கிடைத்தால் வளர்ச்சியை கொண்டுவருவேன்” என்ற ரீதியில் பேசினார். இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் சுரேஷ் கோபி மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோர் நேற்று மத்திய இணை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

திருச்சூர் பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபி

இந்த நிலையில் திடீரென அமைச்சர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சுரேஷ் கோபி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒரு எம்.பி-யாகவே செயல்பட முடிவுசெய்துள்ளேன். நான் டெல்லி தலைமையில் எதுவுமே கேட்கவில்லை. எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றுதான் கூறியிருந்தேன். அமைச்சரவையில் இருந்து என்னை விரைவில் விடுவிப்பார்கள் எனத்தோன்றுகிறது. தாமதப்படுத்தாமல் என்னை விடுவிப்பார்கள். திருச்சூர் மக்களுக்கு எம்.பி என்ற நிலையில் சிறப்பான செயல்பாட்டை காட்டுவேன். நான் சினிமாவில் நடித்தே தீருவேன். இதுபற்றி தலைமை தீர்மானிக்கட்டும்” என்றார்.

பிரதமர் மோடியுடன் சுரேஷ்கோபி

இதுகுறித்து கேரளா அரசியல் விவரப்புள்ளிகள் கூறுகையில், “2019 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேஷ் கோபிக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் கால்பதித்த பா.ஜ.க-வின் முதல் எம்.பி என்ற வகையில் மத்திய கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்கும் என சுரேஷ் கோபி எதிர்பார்த்துள்ளார். இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சுரேஷ் கோபி அதிருப்தியில் உள்ளர். டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததும் பதவி பிரமாணம் செய்துகொள்ள விரைந்து சென்றார் சுரேஷ் கோபி. ஆனால், இணை அமைச்சர் பதவி என்றதும் அதை கவுரவ குறைச்சலாக எண்ணி பின்வாங்குகிறார். சினிமாவில் நடிப்பதுதான் முக்கியம் என்றால் அமைச்சராக வேண்டும் என டெல்லி அழைத்த உடனேயே தனது கருத்தை கூறி பதவி ஏற்புக்கு செல்லாமல் இருந்திருக்கலாமே. கேபினெட் அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக சுரேஷ் கோபி இப்படி நடந்துகொள்கிறார்” என்றனர். இதற்கிடையே சுரேஷ் கோபிக்கு சினிமாவில் நடிக்க அனுமதி வழங்கப்படும் எனவும், அவர் மத்திய அமைச்சராக தொடருவார் எனவும் கேரளா மாநில பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர். சுரேஷ் கோபியை சமாதானப்படுத்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான பி.கே.கிருஷ்ணகுமார் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb