Cabinet: `இணையமைச்சர் பதவிதான்’ – கறார் காட்டிய பாஜக… காத்திருக்க முடிவு செய்த அஜித் பவார்!

டெல்லியில் நேற்று பதவி ஏற்ற மத்திய அமைச்சரவையில் மகாராஷ்டிராவிற்கு 6 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு 5 எம்.பி.க்கள் இருந்தால் ஒரு அமைச்சர் பதவி என்ற கணக்கில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் இருந்து 7 இடங்களில் வெற்றி பெற்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு ஒரு அமைச்சர் பதவி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 4 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இணையமைச்சர் பதவி கொடுப்பதாக பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

தேசியவாத காங்கிரஸ் சார்பாக பிரபுல் பட்டேலை மத்திய அமைச்சராக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி கொடுப்பதாக பா.ஜ.க தெரிவித்ததால் அதனை தேசியவாத காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

பிரபுல் பட்டேல் ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்துள்ளார். அவருக்கு இணையமைச்சர் பதவி கொடுத்தால் பதவி இறக்கமாகிவிடும் என்று அஜித் பவார் கட்சி கருதுகிறது. இது குறித்து பிரபுல் பட்டேல் கூறுகையில், ”தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி எங்களது கட்சிக்கு கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் நான் ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்தவன் என்பதால் இணையமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினேன். எனவே சில நாள்கள் பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்”என்றார்.

இதே கருத்தைத்தான் அஜித் பவாரும் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ”மூத்த தலைவரான பிரபுல் பட்டேலுக்கு இணையமைச்சர் பதவி கொடுப்பது சரியாக இருக்காது என்பதால் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். அரசுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். கூட்டணியில் இருந்து வெளியில் செல்லும் பேச்சுக்கு இடமில்லை” என்றார். அதே சமயம் இணையமைச்சர் பதவியை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சுனில் தட்கரேயிக்கு கொடுத்து இருக்கலாம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமித் ஷாவுடன் ஷிண்டே மற்றும் அஜித் பவார்

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்ய சபையிலும் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார். கடந்த அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த பா.ஜ.கவை சேர்ந்த நாராயண் ரானே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. மராத்வாடா பகுதியில் பா.ஜ.க போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்திருப்பதால் அப்பகுதியை சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88