Odisha: `தீவிர அரசியலிலிருந்து விலகுகிறேன்!’ – வி.கே.பாண்டியன் அறிவிப்பு | V K Pandian

ஒடிசா மாநிலத்தில் மார்ச் 5, 2000-ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற பி.ஜே.டி கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக், கடந்த 24 ஆண்டுகளாகத் முதல்வராகவே தொடர்ந்தார். இந்த நிலையில், ஓடிசாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “ஒடிசாவில் பிறந்து ஒடியா பேசும் ஒருவர் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர். பூரி ஜெகந்நாதர் ஆலய பொக்கிஷ சாவி தமிழகத்துக்கு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?” என வி.கே.பாண்டியனையும் (V K Pandian), தமிழகத்தையும் தாக்கிப் பிரசாரத்தை நடத்தினார்.

நவீன் பட்நாயக்

அதைத் தொடர்ந்து, பி.ஜே.டி மீண்டும் வெற்றி பெற்றால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலையை காரணம் காட்டி பாண்டியன் ஒடிசா முதல்வராக பதவியேற்பார் என பா.ஜ.க தீவிரமாக குற்றம்சாட்டியது. இந்த நிலையில்தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 78 தொகுதிகளை வென்று, நவீட் பட்நாயக்கிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. பி.ஜே.டி கட்சியின் தோல்விக்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் என பி.ஜே.டி கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

V K Pandian : `மக்களுக்காக சிறப்பாக செயல்பட்ட நேர்மையான மனிதர், பாண்டியன்’ – நவீன் பட்நாயக் 

இந்தக் குற்றசாட்டு குறித்து ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளரிடம், “கட்சியின் தோல்விக்கு பாண்டியன் மீதான விமர்சனம் துரதிஷ்டவசமானது. ஒரு சிறந்த அதிகாரியாக வி.கே.பாண்டியன் கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றினார். குறிப்பாக ஒடிசவை புரட்டிய இரண்டு புயல்கள், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அவரது பணி மிக முக்கியமானது. அவருடைய இந்தப் பணிக்குப் பிறகு, அதிகாரத்துவத்திலிருந்து ஓய்வு பெற்று பி.ஜே.டி-யில் சேர்ந்தார்.

வி.கார்த்திகேய பாண்டியன் ஐ.ஏ.எஸ்

அவர் கட்சியில் சேர்ந்து பதவி ஏதும் வகிக்கவில்லை. எந்த தொகுதியிலும் தேர்தலில் போட்டியிடவில்லை. ஒடிசா மக்களுக்காக சிறப்பாக செயல்பட்ட நேர்மையான மனிதர். அதற்காகவே அவர் நினைவு கூறப்பட வேண்டும். எனது உடல்நிலை எப்போதும் நன்றாகவே இருக்கிறது. கடந்த மாதம் வெயிலில் நான் பரபரப்பான பிரசாரம் செய்ததை நீங்கள் பார்த்தீர்கள். அதுவே என் உடல்நிலை குறித்த போதுமானதாக ஆதரமாகும். நாங்கள் எப்போதும் முயற்சி செய்து சிறப்பாக பணியாற்றி வருகிறோம்.

எங்கள் ஆட்சியிலும் கட்சியிலும் பெருமைப்படுவதற்கு நிறைய இருக்கிறது. ஜனநாயக நாட்டில் வெற்றியும் தோல்வியும் இயல்பானதே. நீண்ட காலத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். மக்களின் தீர்ப்பை எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒடிசாவின் 4.5 கோடி மக்கள்தான் என் குடும்பம் என்று எப்போதும் கூறி வருகிறேன். என்னால் முடிந்த வழிகளில் அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்.

நவீன் பட்நாயக் – வி.கே.பாண்டியன்

எனது வாரிசு பாண்டியன் இல்லை என்று நான் எப்போதும் தெளிவாக கூறியுள்ளேன். எனது வாரிசை ஒடிசா மக்கள்தான் முடிவு செய்வார்கள்.” எனக் குறிப்பிட்டார். இந்த நிலையில், வி.கே பாண்டியன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “என் பிரசாரம் பி.ஜே.டி கட்சி தோற்கடிக்க வழிவகுத்திருப்பதாக கருதினால், இந்தக் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

V K Pandian : `தீவிர அரசியலிலிருந்தும் விலகுகிறேன்’ – வி.கே.பாண்டியன்

மேலும், தீவிர அரசியலிலிருந்தும் விலகுகிறேன். இங்கு வந்து நான் எந்த செல்வத்தையும் குவித்துக்கொள்ளவில்லை. சிவில் சர்வீஸ் தொடங்கியதிலிருந்து இன்று வரை எனது சொத்து அப்படியே இருக்கிறது. ஒடிசா மக்களுக்காகவும், ஜெகநாதருக்காகவும் எனது இதயம் என்றும் நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb