‘கைகொடுக்காத பிரேமலதாவின் அரசியல் நகர்வுகள்’ – இனி என்ன ஆகும் தேமுதிக?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க-வை ஆரம்பித்தார், விஜயகாந்த். அன்றைய தினம் நடந்த மாநாட்டில் குவித்த விஜயகாந்த் ரசிகர்களால் மதுரையே திக்குமுக்காடி போனது என்றுதான் சொல்லவேண்டும். அப்போது “தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. நான் ஆண்டவனுடனும், மக்களுடனும் மட்டும்தான் கூட்டணி” என்றார் விஜயகாந்த். இந்த வார்த்தைகள் விஜயகாந்தின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைதான் கொடுத்தது. பிறகு 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 234 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க-வுக்கு 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. விருத்தாச்சலத்தில் களம் கண்டிருந்த விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். மற்ற இடங்களில் யாரும் வெற்றிபெறாத போதும் அக்கட்சி 8.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இது ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க செய்தது.

விஜயகாந்த்

இதையடுத்த 2009-ம் தேர்தலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே களமாடினார் விஜயகாந்த். அப்போது எந்தத் தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது, தே.மு.தி.க. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.3 சதவீத ஆகும். ஆனால் 2011-ம் ஆண்டில் தனித்து போட்டி என்கிற தனது முடிவை மாற்றிக்கொண்டார், விஜயகாந்த். அந்த இடத்தில் இருந்துதான் தே.மு.தி.க -வின் வீழ்ச்சியும் தொடங்கியது. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் இணைந்து தேர்தலை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது தே.மு.தி.க-வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 29 இடங்களில் வெற்றிபெற்று, 7.9 சதவீத வாக்குகளையும் விஜயகாந்த் பெற்றார். இதையடுத்து தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்தது.

ஆனால் சில காலத்திலேயே அ.தி.மு.க, தே.மு.தி.க கூட்டணி உடைந்தது. நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க-வுக்கு தாவினார்கள். இதையடுத்து 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது தே.மு.தி.க. 14 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வி ஏற்பட்டது. வாக்கு சதவீதமும் 5.1% குறைந்தது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இணைத்து தேர்தல் சந்தித்தன. இதில் 104 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க-வுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பெற்ற வாக்குகள் 2.41 சதவீதம்தான். இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. கட்சிக்குள் சுதீஷின் எழுச்சி அதிகரித்தது. இது கட்சியினரை சோர்வடைய செய்தது.

ஜெயலலிதா

பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க-வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி ஏற்பட்டதுடன் 2.19 சதவீதமாக வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இதையடுத்து 2023-ல் நடந்த தேர்தலில் அ.ம.மு.க கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க-வுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டன. முடிவில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியே ஏற்பட்டது. வாக்கு வங்கியும் 0.43% ஆக குறைந்தது. இந்தசூழலில் விஜயகாந்த் உடல்நிலை மேலும் பாதிப்படைய ஆரம்பித்தது. உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அந்த நேரத்தில் குடும்பத்துடன் விஜயகாந்த் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் புகைப்படம் வெளியானது. இது தே.மு.தி.க தொண்டர்களை உற்சாகமடைய செய்தது. மீண்டும் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டினார். அதில் கட்சியின் பொதுச்செயலாளரானார், பிரேமலதா.

பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் மறைந்தார். இந்தசூழலில்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலும் வந்தது. அதிமுக கூட்டணியை தேர்ந்தெடுத்த தே.மு.தி.க-வுக்கு விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர் (தனி), வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முடிவில் திருவள்ளூர், வடசென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். விஜய பிரபாகரன் எப்படியும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களம் அவ்வளவு எளிதாக இல்லை. அதாவது தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பா.ஜ.க சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

விஜயபிரபாகரன்

இதனால் விருதுநகரில் மும்முனை போட்டி நிலவியது. களம் கடினமாக இருக்கும் சூழலில், எப்படியாவது விஜயபிரபாகரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த தே.மு.தி.க-வும் தீயாக வேலை செய்தது. இதேபோல் தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கு எதிராக அவர் எடுத்து வைத்த வாதங்கள் பிரச்சார களத்தை மேலும் சூடாக்கியது. கூடவே விஜயகாந்தின் மறைவும், கூட்டணி கட்சிகளின் வாக்கு சேகரிப்பும் மக்களிடத்தில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. இதனால் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்கிற மனநிலையில்தான் தே.மு.தி.க தொண்டர்கள் இருந்தார்கள். அதுபோலவே ஓட்டு எண்ணிக்கையின் போது மாணிக்கம் தாகூருக்கு கடும் நெருக்கடியை விஜயபிரபாகரன் கொடுத்தார். ஒரு கட்டத்தில் தே.மு.தி.க வெற்றி பெறும் சூழல் உருவானது. இறுதியில் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 4,379 வாக்குகள் குறைவாக 3,80,877 வாக்குகளைத்தான் விஜயபிரபாகரனால் பெற முடிந்தது. இதையடுத்து சதி நடந்திருப்பதாகபும், மறுவாக்கு பதிவு வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார், பிரேமலதா. மறுபக்கம் தொடர் வீழ்ச்சியால் தே.மு.தி.க இனி என்ன ஆகும் என்கிற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “கூட்டணி அமைப்பதில் சரியான முடிவு எடுக்காதது, விஜயகாந்தின் மரணம் போன்றவை தேமுதிகவை பெரும் வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. இந்தசூழலில்தான் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் விஜய பிரபாகரனுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இதற்கு விஜயகாந்த் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாபம் மட்டும்தான் காரணம். கூடவே அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியும் கைகொடுத்துள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் வெற்றி கை நழுவி போனது. அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் அவர் நின்றால் கூட இந்த அளவுக்கு வாக்குகளை பெற முடியுமா? என்பது சந்தேகம்தான். வரக்கூடிய இரண்டு ஆண்டுகள் தே.மு.தி.க-வுக்கு மிகவும் முக்கியமானது. பொது மக்களின் பிரச்னைகளுக்கு மிகவும் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும்.

குபேந்திரன்

சோர்வடைந்த தொண்டர்களை மீண்டும் உற்சாகமடைய செய்யும் வகையில் கூட்டங்களை நடத்துவது, சரியான நபர்களை தேர்வு செய்வது போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தே.மு.தி.க தமிழக அரசியல் களத்தில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் அனுதாப அலைகள் ஒரு முறை தான் கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு ஓபிஎஸ் மூன்று முறை முதல்வராக இருந்தார். அவரே வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். எனவே அரசியல் களத்தில் எந்த சாதனையையும் நிகழ்தாத விஜயபிரபாகரன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88