மதுரை சிறைச் சந்தை: `இனி திருமண சீர்வரிசையும் கிடைக்கும்! – சிறைவாசிகளின் அடுத்த முயற்சி

மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறைச் சந்தையில் சிறைவாசிகள் மூலம் பல்வேறு பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மத்திய சிறை

ஏற்கெனவே, இங்குள்ள உணவகம், பேக்கரி மூலம் உணவுப் பொருட்களும் ரெடிமேட் ஆடைகள், காலணிகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிதாகத் தொடங்கப்பட்ட பர்னிச்சர் பிரிவின் மூலம் கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சோஃபா ஆகியவை மரம் மற்றும் இரும்பில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பர்னிச்சர்கள்

இந்த நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தன் மகளின் திருமணத்திற்கு தேக்கு மரத்தில் திருமண சீர்வரிசை பொருட்கள் தயார் செய்து தருமாறு சிறை சந்தையில் ஆர்டர் கொடுத்திருந்தார். உடனே சிறைவாசிகள் மூலமாக தேக்கு மரத்தில் கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சோபா, டீ பாய் ஆகியவை நேர்த்தியாக குறைந்த விலையில் அவர்களின் விருப்பத்தின்படி தயார் செய்யப்பட்டு சிறைத்துறை டிஐஜி பழனி, சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மூலமாக அவர்களிடம் வழங்கப்பட்டது.

இது குறித்து டிஐஜி பழனி கூறும்போது, “மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் சிறை சந்தையில் புதிதாக தொடங்கப்பட்ட பர்னிச்சர் பிரிவில் கட்டில், பீரோ உள்ளிட்டவைகள் மரத்திலும், இரும்பிலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப விரும்பும் டிசைன்களில் தயார் செய்யப்பட்டு குறித்த நேரத்தில் செய்து தரப்படுகிறது.

பர்னிச்சர் விற்பனை

ஒரு திருமணத்திற்குத் தேவையான அனைத்து சீர் வரிசைப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த சிறைச்சந்தை செயல்பட்டு வருகிறது, சிறைத் துறையின் இந்த சீர்திருத்தப் பணிக்கு ஆதரவு தருமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.