மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகப் போகிறாரா தமிழிசை?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒவ்வொரு கட்சியும் அடுத்தடுத்த நகர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியின் தலைமைகளும் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வுகள், நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றன. அப்படி தேசியக் கட்சியான பா.ஜ.க-வும் மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் மாற்றத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். அதன் ஒருகட்டம்தான், “அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி இருந்திருந்தால், தி.மு.க-வுக்கு ஓர் இடத்தில்கூட வெற்றி இல்லாமல் போயிருக்கும் என்பதை என்னால் தெளிவாக கூற முடியும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கூட்டணி என்பது ஓர் அரசியல் வியூகம். தமிழ்நாட்டிலும் அகில இந்திய அளவிலும் ஒவ்வொரு கட்சியிலும் அதைச் சரியாகப் பயன்படுத்தி உள்ளனர்.” எனப் தமிழ்நாட்டில் பா.ஜ.க சரியான கூட்டணி அமைக்கத் தவறியிருக்கிறது எனப் பேசியிருக்கும் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை, “எதிர்க்கட்சி இணையதளவாசிகளை எதிர்ப்பது போலவே உட்கட்சி இணையதளவாசிகளையும் நான் விமர்சிக்கிறேன். உள்ளே நடக்கும் கட்சிப் பிரச்னைகள், கட்சியின் தலைவர்களைத் தவறாக எழுதுவீர்கள் என்றால், முன்னாள் மாநில தலைவர் என்ற முறையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் எச்சரிக்கிறேன். நான் கடுமையாக உழைப்பதற்காக வந்து இருக்கிறேன்.” என்றவர்…

பாஜக – அண்ணாமலை – தமிழிசை சௌந்தரராஜன்

“நான் கவர்னராக இருக்க வேண்டுமா, தலைவராக இருக்க வேண்டுமா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். நான் முடிவு செய்துவிட்டேன் தமிழ்நாடு களத்தில்தான் நிற்பேன். மீண்டும் நான் மாநிலத் தலைவராவது என் கையில் இல்லை.” எனப் பேசியிருப்பதையும் வைத்து தமிழ்நாட்டில் பா.ஜ.க மாநிலத் தலைமையும் மாற வாய்ப்புள்ளது என்ற செய்திகள் பரபரத்துக்கொண்டிருக்கின்றன. “மீண்டும் தமிழ்நாட்டில் பா.ஜ.க மாநிலத் தலைவர் ஆகப் போகிறாரா தமிழிசை… அல்லது மாநிலத் தலைமை மாற்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்ற கேள்வியோடு கமலாலயத்தை வலம் வந்தோம்…

“தமிழ்நாட்டில் இருபத்து ஐந்து சதவிகிதம் வாக்குகள் வாங்குவோம்… இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறுவோம் எனத் தலைமை சொன்னதை தொண்டர்கள் மட்டுமல்ல, டெல்லி தலைமையும் முழுவதுமாக நம்பி இந்தத் தேர்தலில் அவரது போக்கு ஒத்துழைப்பு தந்தனர். ஆனால், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்ததோடு 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது பா.ஜ.க.” எனப் பேசத் தொடங்கிய சீனியர் ஒருவர், “இது மனதளவில் தொண்டர்களைச் சோர்வடையச் செய்திருக்கிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் நல்ல பலமான கூட்டணியாக இருந்ததை மாநிலத் தலைமைதான் ஒடைத்துவிட்டது. சீனியர்களை மதிப்பதில்லை, ஆடியோ, வீடியோ விவகாரங்கள் மூலம் கட்சியில் பலரும் கட்டம் கட்டப்பட்டார்கள், தலைமையை எதிர்த்தவர்களை வார் ரூம் நிர்வாகிகள் மூலம் அவதூறாகப் பேச வைத்தார்கள். அமித் ஷா, மோடிக்கு நெருக்கமாகத் தன்னைக் காட்டிக்கொண்டதால், தலைமைக்கு எதிராகப் புகார் கொடுக்கவே பலரும் அஞ்சினர். தமிழ்நாட்டில் பா.ஜ.க என இல்லாமல் தான்தான் எனத் தன்னை ப்ரமோட் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இதையெல்லாம் தொடர்ந்து டெல்லிக்குப் புகாராக அனுப்பியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தற்போது அதற்கான விலையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது தெரிந்திருக்கும் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் உண்மை நிலவரம். எனவே, தலைமையை மாற்ற வேண்டும் என்ற குரல் சீனியர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.” எனத் தொடர்ந்தார்.

கோவை பாஜக – வானதி – அண்ணாமலை

“இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தமிழிசை, வானதி சீனிவாசன், இராம.சீனிவாசன், கருப்பு முருகானந்தம், ஸ்ரீதர் வேம்பு, நயினார் நாகேந்திரன் எனப் பலரும் மாநிலத் தலைமைப் பொறுப்புக்கு வரத் தங்களுக்கு நெருக்கமான வழிகளில் டெல்லியை அணுகியிருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்.

மற்றொரு தரப்போ, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. அங்கிருக்கும் நிர்வாகிகளின் கடுமையான உழைப்புத்தான் இந்த உயர்வுக்குக் காரணம். இப்படியே போனால் நிச்சயம் வருங்காலங்களிலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் வளர்ச்சி அபாரமாக இருக்கும்” என பிரதமர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திலேயே பேசியிருக்கிறார். அண்ணாமலை மீது மோடி எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அவர் சொன்னதைப்போல, பா.ஜ.க 11 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக டெல்லியும் பிஸியாக இருக்கிறது. எனவே, இப்போதுவரை மாநிலத் தலைமையை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. சீனியர்கள் சிலர் இந்தத் தேர்தல் தோல்வியைப் பயன்படுத்தி முக்கியப் பொறுப்புகளுக்குக் காய்நகர்த்தி வருகிறார்கள். அவர்கள் கிளப்பிவிடும் தகவல்தான் இவையெல்லாம்.”என்றவர்கள்

அண்ணாமலை, மோடி

“எது எப்படியோ இப்போதைக்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க மாநிலத் தலைமை மாற வாய்ப்பில்லை. தமிழிசையும் அந்த எண்ணத்தில் எதுவும் பேசவும் இல்லை என்பதுதான் நிலவரம்” என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88