ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள புத்தனேந்தல் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான செஞ்சோலை காப்பகம் ஒன்று உள்ளது. அரசு அனுமதி மற்றும் உதவிகளுடன் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மனநல குறைபாடு உடையவர்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த காப்பகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புடன் உள்ளூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மனநல காப்பகத்தின் அருகில் செல்லு காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது. இது குறித்து காப்பக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து குடிநீர் குழாய் உடைப்பினை சரி செய்ய வந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், காப்பகத்திற்கு செல்லும் இணைப்பையும் துண்டித்துவிட்டனர்.
இதனால் காப்பகத்தில் உள்ள நோயாளிகள் குடிநீர் இன்றி அவதிக்குள்ளாகினர். இதனிடையே கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் வழங்கி வந்த உப்பு தண்ணீரும் காப்பகத்திற்கு வழங்கப்படவில்லை. இது குறித்து காப்பக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் காப்பகத்தில் உள்ள நோயாளிகளின் தேவைக்காக தனியாரிடம் இருந்து நாள்தோறும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இவ்வாறு வாங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா என்ற அச்சத்துடனேயே நோயாளிகளுக்கு வழங்கப்படும் நிலையும் உள்ளது. எனவே துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பினை வழங்க கோரி அதிகாரிகளிடம் பலமுறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மனநல காப்பகத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாஸ் லைன்) மற்றும் செஞ்சோலை மனநல காப்பக நிர்வாகத்தினர் ராமநாதபுரம் அரண்மனை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனநல காப்பக நிர்வாகி நாகேஸ்வரன் மற்றும் மனநல சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருன் கோரிக்கை.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88