காங்கிரஸ் 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களுடன் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் ஆட்சியும் பா.ஜ.க வசம் சென்றது, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையும் காலியானது. அதைத்தொடர்ந்து, 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையாகப் பெரிய வெற்றியைப்பெற, காங்கிரஸ் வெறும் 52 இடங்கள் பெற்று மீண்டும் படுதோல்வியடைந்தது. இதனால், 2019-லும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காலியாகவே இருந்தது.
இவ்வாறாக, 2014 முதல் 2024 வரை பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகளிலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காலியாகவே இருந்தது. சொல்லப்போனால், மக்களவை அந்த 10 ஆண்டுகளும் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாமலே செயல்பட்டது. காரணம், மத்தியில் ஆட்சியைப் பிடிக்க எப்படி குறைந்தபட்சம் 272 இடங்கள் தேவையோ, அதேபோல அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாகச் செயல்பட குறைந்தபட்சம் 55 இடங்கள் தேவை. அதாவது, மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித இடங்களை ஒரு கட்சி பெறவேண்டும்.
இப்படியிருக்க தற்போது நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையைப் பெறமுடியாமல் என்.டி.ஏ கூட்டணியாக 293 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தாலும், மக்களவையில் இந்த முறை எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை உறுதியாகியிருக்கிறது. காரணம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பெற்ற 234 இடங்களில் காங்கிரஸ் மட்டுமே 99. இதோடு, மகாராஷ்டிராவில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஷால் பாட்டில் என்பவர் காங்கிரஸில் தற்போது இணைந்ததன் மூலம் காங்கிரஸின் எண்ணிக்கை மூன்று இலக்கமாக 100-ஐ தொட்டிருக்கிறது.
இதன்மூலம் தற்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காங்கிரஸ் வசம் சென்றிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியின் தலைவராக முன்மொழியப்பட்ட மோடி நாளை மூன்றாவதாகப் பிரதமராகப் பதவியேற்கும் நிலையில், காங்கிரஸில் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்று இன்னும் முடிவாகவில்லை.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டுவருவதால், ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இதில் அடிபடுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி இருக்கவேண்டும் என சசி தரூர் மனம் திறந்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் இதுகுறித்து பேசிய சசி தரூர், “மல்லிகார்ஜுன கார்கேவும் நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். ஆனால், தற்போது அவர் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியை வழிநடத்துகிறார். இப்போது, மக்களவையில் அரசாங்கத்தை எதிர்த்து நிற்க எங்களிடம் வலுவான எண்ணிக்கை இருக்கிறது.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சந்தேகத்திற்கிடமின்றி கட்சியில் மிகவும் பிரபலமான ஒரு தலைவர் இருக்க வேண்டும். அதற்கு, ராகுல் காந்தி பொருத்தமாக இருப்பார். அவர்தான் ஆட்டநாயகன். இது தொடர்பாக எனது கருத்தைப் பகிரங்கமாகவும், தனிப்பட்ட முறையிலும் தெரிவித்திருக்கிறேன்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88