Muslim Reservation : `ஆந்திராவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு நீடிக்கும்’ – சந்திரபாபு மகன் உறுதி

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 291 இடங்கள் பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவிருக்கிறது. இதில், பாஜக 240 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையை இழந்தபோதிலும், கூட்டணியிலுள்ள தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்கள் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 12 இடங்கள் உதவியுடன் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது.

மோடி – சந்திரபாபு நாயுடு

கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இடங்களைப் பெற, பல கட்சிகள் அதையும் பெறவில்லை. இதனாலேயே, என்.டி.ஏ அரசின் அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Muslim Reservation – `இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு நீடிக்க வேண்டும்!’ – நாரா லோகேஷ்

இப்படியிருக்க, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு (Muslims Reservation) நீக்கப்படும்’ என்று அமித் ஷா கூடியிருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷ், `ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு நீடிக்கும்’ என திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

நாரா லோகேஷ்

தனியார் ஊடகத்துடனான பேட்டியில் இதுபற்றி பேசிய நாரா லோகேஷ், “இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு தசாப்தங்களாக இங்கு இருந்துவருகிறது. இது நீடிக்க வேண்டும் என்றே நாங்களும் நினைக்கிறோம். இது சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துவதற்காக அல்ல. அவர்களின் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதால், சமூகநீதிக்காக இது அளிக்கப்படுகிறது. ஒரு அரசாங்கமாக, அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது எனது பொறுப்பு.

இட ஒதுக்கீடு

எனவே இதில் நான் எடுக்கும் எந்தவொரு முடிவுகளும் அவர்களைத் திருப்திப்படுத்த அல்ல, உண்மையாகவே வறுமையிலிருந்து மீட்பதற்காகவே. நாட்டை வளர்ந்த நாடாக முன்னேற்றவேண்டுமானால், ஒருவரையும் விட்டுவிடமுடியாது. ஒற்றுமையாக இருந்து அதைச் செய்ய வேண்டும். அதற்கான நல்வாய்ப்பு தற்போது அமைந்திருக்கிறது. அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வதே தெலுங்கு தேசம் கட்சியின் நோக்கம்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb