ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசியபடி வாகனத்தில் சென்ற பெண் காவலர்! – வீடியோ வைரலானதால் அபராதம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் செல்வராணி. இவர் தனது ஸ்கூட்டரில் போகும்போது செல்போனில் பேசியபடி ஓட்டியுள்ளார். அப்போது, அவர் ஹெலமெட்டும் அணியவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், அந்த பெண் காவலரை முந்தி சென்ற அந்த நபர், ‘ஏன் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவில்லை?. போக்குவரத்து விதிமுறைகள் எங்களுக்கு மட்டும் தானா… உங்களுக்கு அது பொருந்தாதா?’ என சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பெண் காவலர் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால், அந்த நபர் தான் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

பெண் காவலர்

அதையடுத்து திருச்சி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய செல்வராணிக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்நிலையில், “இப்படிப்பட்டவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண் காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் செல்போனில் பேசியபடி சென்றதால், அவருக்கு போக்குவரத்து பிரிவு போலீஸார் அபராதம் விதித்துள்ளது, திருச்சி மாவட்ட போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.