சேலம்: சந்தன கட்டை கடத்தலில் பிடிபட்ட கேரளா கடத்தல் கும்பல்… போலீஸார் தீவிர விசாரணை!

சேலம் வழியாக சந்தனக் கட்டைகள் சரக்கு வாகனத்தில் கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனவர்கள் மணிவண்ணன், சுரேஷ், பழனிவேல் மற்றும் வனக்காப்பாளர்கள் அடங்கிய தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில், மகுடஞ்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகம் படும்படி வந்த சரக்கு வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில், 86 சாக்கு மூட்டைகளில் 1.5 டன் சந்தன கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், மாஞ்சேரி நறுக்கரா பகுதியை சேர்ந்த முகமது சுகர், உதவியாளரான மலப்புரம், புக்கட்டுரை சேர்ந்த முகமது பசிலு ரகுமான் ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், சந்தன கட்டை கடத்தலில் மேலும் நான்கு பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் ஹோட்டலில் பதுங்கி இருந்த அந்த நான்கு பேரையும் தனிப்படையினர் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கேரளா மலப்புரம் பகுதியை சேர்ந்த முகமது மிஸைல், முகமது அப்ரார், பஜாஜ், உமர் என தெரியவந்தது. இவர்கள் கேரளாவில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னைக்கு சந்தன கட்டைகளை கடத்தி சென்றுள்ளனர்.

யாருக்காக கடத்தப்பட்டது என்பது குறித்து 6 பேரிடமும் வனத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரளா வனப்பகுதியில் ரகசியமாக வெட்டி பதுக்கிவைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1.5 டன் சந்தன கட்டைகளை சிறிய அளவிலான சாக்கு மூட்டைகளில் கட்டி கன்டெய்னர் போன்ற சரக்கு வண்டியில் கடத்தி வந்துள்ளனர். சேலம் மாவட்ட எல்லை பகுதியில் அந்த வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதன்படியே 6 பேர் கொண்ட கும்பலும் சரக்கு வாகனத்தில் சந்தன கட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்ட எல்லைக்கு வந்துள்ளனர்.

கைது

ஆனால், வழியில் சரக்கு வாகனம் பிடிபட்டதும், நான்கு பேர் ஒரே காரில் தப்பியுள்ளனர். சேலத்தில் வாகனத்தை நிறுத்தியதும் மற்றொரு கும்பல் வந்து அதனை எடுத்துக் கொண்டு சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அந்த நபர்கள் பற்றிய விவரம் தங்களுக்கு தெரியாது என சிக்கிய 6 பேரும் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சந்தன கட்டைகளும் மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சந்தன கட்டைகள் சென்னைக்கு யாருக்காக கடத்தப்பட்டது என்பது பற்றி தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.