Stock Market: ரூ.30 லட்சம் கோடி இழப்பு; மோடி, அமித் ஷாவைக் குற்றம்சாட்டும் காங்கிரஸ் – பின்னணி என்ன?

இந்தியப் பங்குச்சந்தையில் ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்த நிலையில், ‘ஜூன் 4-ம் தேதியன்று இந்தியப் பங்குச்சந்தையில் சாமானிய மக்கள் ரூ.30 லட்சம் கோடியை இழந்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய ஊழல்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

மோடி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ம் தேதி இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து. அதாவது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு, மிகப்பெரிய வீழ்ச்சியை இப்போது இந்தியப் பங்குச்சந்தை சந்தித்தது.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றிபெறும் என்று பிரதமர் கூறியதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் அந்தப் பிரசாரத்தை பெரியளவுக்கு முன்னெடுத்தனர். அதைத் தொடர்ந்து, ‘மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்’ என்று தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

அமித் ஷா

Stock Market – பங்குச்சந்தை திடீர் ஏற்றமும்… கடும் வீழ்ச்சியும்!

ஏழாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற ஜூன் 1-ம் தேதி வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 350 இடங்கள் முதல் 401 இடங்கள் வரை கிடைக்கும்’ என்று குறிப்பிட்டன. உடனே, இந்தியப் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவுக்கு ஏற்றம் கண்டது. பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக தேர்தல் முடிவுகள் இருந்தன. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு என்ற செய்தி பா.ஜ.க-வினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும், கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது போல பா.ஜ.க-வுக்கு வெற்றி இல்லை என்பது வெளிப்பட்ட நிலையில், பங்குச்சந்தை சரியத் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி கடும் சரிவுகளைச் சந்திக்க வர்த்தகம் தொடங்கிய 15 நிமிடங்களிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. கடைசியில் ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு பங்குச்சந்தையில் இழப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தல் – பங்குச்சந்தை

இதற்கு முன்பு பங்குச்சந்தை இறக்கத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், இந்த முறை ஏற்பட்ட இழப்புக்கு நேரடியான அரசியல் காரணங்கள் இருப்பதுதான் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பங்குச்சந்தையைக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

ஐந்தாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘தேர்தல் முடிவுகள் குறித்து தலால் தெருவில் இருக்கும் பதற்றத்தைக் குறைத்து ஜூன் 4-ம் தேதி அனைத்து சாதனைகளையும் இந்திய பங்குச்சந்தை முறியடிக்கும்’ என்றார். பிரதமரின் கருத்தை எதிரொலிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பேசினார். ஆனால், ஜூன் 4-ம் தேதி இந்தியப் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

ராகுல் காந்தி

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கான பலம் இல்லாத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் ஆதரவுடன் மோடி 3.0 ஆட்சி அமையவிருக்கிறது. சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு முக்கியமான துறைகளைத் தர வேண்டும் என்று பா.ஜ.க-வுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றன.

இந்த நிலையில், ஜூன் 6-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பங்குச்சந்தை மிகப்பெரிய அளவுக்கு ஏற்றம் காணப்போகிறது என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டார். பங்குச்சந்தையின் மதிப்பு ஜூன் 4-ம் தேதி மிகப்பெரிய அளவுக்கு ஏற்றம் பெறப்போகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதே கருத்தை முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக, ஜூன் 3-ம் தேதி வரலாறு காணாத அளவுக்கு பங்குச்சந்தை ஏற்றம் கண்டது. அடுத்த நாளான ஜூன் 4-ம் தேதி நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியை பங்குச்சந்தைச் சந்தித்தது.

அமித் ஷா, மோடி

Stock Market – மோடி, அமித் ஷாவைக் குற்றம்சாட்டும் காங்கிரஸ்!

வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, பா.ஜ.க வெற்றியை பூதாகரமாகக் காண்பித்தது ஏன்? தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டனர். ரூ.38 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்’ என்று ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசனிடம் பேசியபோது, ‘தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும், பங்குச்சந்தை விவகாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று பிரசாரம் செய்ததுடன், பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்றம் பெறப்போகிறது என்று பொய்யான நம்பிக்கையையும் அளித்ததுதான் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததற்கு முக்கியக் காரணம்.

ஆனந்த் சீனிவாசன்

ஆகவே, இவ்வளவு பெரிய இழப்புக்கு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அளித்த பொய்யான நம்பிக்கையும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. எனவேதான், இது மிகப்பெரிய ஊழல் என்பதை எங்கள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அவர் வலியுறுத்தியிருப்பதைப்போல, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb