`தமிழ்நாடு, கேரளா என தென்னிந்தியாவில் புதிய அரசியல் அடித்தளம்’ – NDA கூட்டத்தில் மோடி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில், பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்து 240 இடங்களை வென்ற போதிலும், கடந்த முறை என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெறாத தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை கூட்டணியில் இணைந்து 16 இடங்களிலும், அதேபோல் கடந்த முறை கூட்டணியில் அங்கம் வகித்து பின்னர் வெளியேறி மீண்டும் கூட்டணியில் இணைந்த ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் வென்று என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

NDA – மோடி

வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார். இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் வெற்றிபெற்ற அனைத்து எம்.பி-க்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் கூட்டம் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, “இன்று இந்தியாவுக்கு சரியான தலைவர் மோடி. இது இந்தியாவுக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இதைத் தவறவிட்டால், பின்னர் எப்போதும் நாம் இழக்க நேரிடும்” என்று புகழ்ந்தார். அதேபோல், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “நாங்கள் அனைவரும் உங்களுடன் (பிரதமர் மோடி) இணைந்து செயல்படுவோம். அடுத்த முறை நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எதிர்க்கட்சிகள் இந்த முறை பெற்ற இடங்களில்கூட வெற்றிபெறாது என்று நான் உணர்கிறேன்” என்று கூறினார்.

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்

பின்னர் இறுதியாகப் பேசிய மோடி, “என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் சமம். கடந்த 30 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக முன்னேறியதற்கும் இதுவே காரணம். இந்திய வரலாற்றில் இது மிகவும் வெற்றிகரமான கூட்டணி. எங்களின் அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே எங்கள் நோக்கம். தென்னிந்தியாவில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை என்.டி.ஏ கூட்டணி அமைத்திருக்கிறது.

`தமிழ்நாட்டில் எங்களால் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால்…’ – மோடி, NDA

தமிழ்நாட்டில் எங்களால் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அங்கு என்.டி.ஏ கூட்டணியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கேரளாவிலிருந்து முதன்முறையாக ஒரு பிரதிநிதி வந்திருக்கிறார். என்.டி.ஏ என்றால் புதிய இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா, லட்சிய இந்தியா. இந்த நாடு என்.டி.ஏ கூட்டணியை மட்டுமே நம்பியிருக்கிறது.

மோடி

இந்தத் தேர்தலில் என்.டி.ஏ-வுக்கு கிடைத்த வெற்றியை மாபெரும் வெற்றியாக நான் பார்க்கிறேன். எதிர்க்கட்சிகள் எங்களின் வெற்றியை தோல்வி என சித்திரிக்க முயன்றன. ஆனால், நாங்கள் ஒருபோதும் தோல்வியடையவில்லை. 2024 தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே கூறத் தொடங்கிவிட்டன. இது அவர்களின் அதிகாரப் பசியை காட்டுகிறது.

மோடி

10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸால் 100 இடங்களைத் தாண்ட முடியவில்லை. இது கடந்த மூன்று தேர்தலிலும் நாங்கள் பெற்ற இடங்களை விடவும் குறைவு. எதிர்க்கட்சிகள் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக செயல்பாட்டில் மக்கள் நம்பிக்கை வைப்பதை நிறுத்த முடிவு செய்திருந்தனர்.

அவர்கள் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று கூறிவந்தனர். இனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி அவர்கள் பேசுவதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கேட்க முடியாது என்று நம்புகிறேன். ஆனால், 2029-ல் அவர்கள் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பற்றி பேசுவார்கள். நாடு அவர்களை மன்னிக்காது.

மோடி

அடுத்த 10 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சியில் என்.டி.ஏ அரசு கவனம் செலுத்தும். நாட்டுக்காகப் பணியாற்ற முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். அனைத்து நாள்களிலும் 24 மணிநேரமும் என்னைத் தொடர்புகொள்ளலாம். நான் இருப்பேன். நாட்டுக்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb