இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பங்குச்சந்தை விவகாரம் தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. காரணம், தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 13-ம் தேதி ஒரு பிரசாரத்தில், `ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 400 இடங்களை வெல்லும். அதன்பிறகு பங்குச்சந்தை ஏற்றம் காணும். எனவே பங்குகளை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்’ என்றார். அதேபோல், மே 19-ம் தேதி பிரதமர் மோடி, `ஜூன் 4-ம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) பங்குச்சந்தை புதிய உச்சம் தொடும்’ எனக் கூறினார்.
அதற்கேற்றவாறே, ஜூன் 1-ம் தேதி ஊடகங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணி 350-லிருந்து 370-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று தெரிவிக்க, அடுத்தநாளே இந்திய பங்குச்சந்தை புள்ளிகள் திடீரென புதிய உச்சம் தொட்டது. குறிப்பாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் குறியீடு 2,622 புள்ளிகள் (3.5 சதவீதம்) அளவுக்கு உயர்ந்து, 76,583 புள்ளிகளாகக் காணப்பட்டது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 807 புள்ளிகள் வரை உயர்ந்து, 23,337 புள்ளிகளாகக் காணப்பட்டது. இந்த உயர்வு இதுவரையில் இல்லாதது என்று கூறப்பட்டது.
ஆனால், ஜூன் 4 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக கூட்டணி மொத்தமாகவே 293 இடங்களை மட்டுமே பெற, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4,389 புள்ளிகள் குறைந்து 72,079 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1,379 புள்ளிகள் குறைந்து 21,884 புள்ளிகளாகவும் வர்த்தகம் சரிவைக் கண்டது. இதன்மூலம், 425.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சந்தை மூலதனம் ஒரே நாளில் 395.99 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ந்தது. முதலீட்டாளர்கள் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தனர்.
பின்னர், பா.ஜ.க வேண்டுமென்றே கருத்துக்கணிப்பை இவ்வாறு வெளியிடவைத்து பங்குச்சந்தையில் சதிசெய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே, தேர்தல் முடிவுகள் அன்று முதலீட்டாளர்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதற்குப் பின்னணியில் கருத்துக்கணிப்பு மோசடி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறும் செபி-க்கு (SEBI) தலைவர் மதாபி பூரி புச்சிக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இதனை மாபெரும் பங்குச்சந்தை ஊழல் எனத் தெரிவித்து இதன்மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளைச் சம்பாதித்தவர்கள் யார் என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த ராகுல் காந்தி, “பங்குச்சந்தை உச்சம் தொடும் என மோடியும், அமித் ஷாவும் அறிவுரை வழங்குகிறார்கள். இதுவொரு கிரிமினல் குற்றம். பொய்யான கருத்துக்கணிப்பு வெளியானதும், ஜூன் 3-ம் தேதி பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை எட்டுகிறது.
பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான ஜூன் 4-ம் கடும் சரிவைக் காண்கிறது. இதனால், 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதுவொரு மாபெரும் பங்குச்சந்தை ஊழல். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான கோடிகளைச் சம்பாதித்தவர்கள் யார்… இந்த ஊழலை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்” என்று கூறினார்.