`துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்!’ – திட்டவட்டமாகக் கூறிய பட்னாவிஸ்; சமாதானப்படுத்திய RSS!

பா.ஜ.க தலைமையில் மத்திய அமைச்சரவை வரும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க இருக்கிறது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்பது குறித்து பா.ஜ.க ஆலோசித்து வருகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க மகாராஷ்டிராவை மிகவும் நம்பி இருந்தது. ஆனால் ஒரு அதிருப்தி வேட்பாளர் உட்பட 31 இடங்களில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க கூட்டணி வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தோல்விக்கு பொறுப்பு ஏற்று தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஆனால் அவரது இந்த விருப்பத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நிராகரித்துவிட்டார். தேவேந்திர பட்னாவிஸ் தனது சொந்த ஊரான நாக்பூர் புறப்பட்டு சென்றார். நாக்பூரில் தேவேந்திர பட்னாவிஸ் வீட்டிற்கு வந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவருடன் தேர்தல் முடிவு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எடுத்துக்கூறினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 3 தேசிய தலைவர்கள் கலந்துகொண்டனர். 90 நிமிடங்கள் வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

சட்டமன்ற தேர்தல் வரை நீடிக்கும்படியும், இப்போது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், அது சட்டமன்றத் தேர்தலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் அறிவுரை வழங்கினர். பட்னாவிஸுடன் நாக்பூர் சென்ற மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பட்னாவிஸ் தொடர்ந்து துணை முதல்வர் பதவியில் நீடிக்கவேண்டும் என்று கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தால் மக்களை குழப்பிவிட்டார்கள். எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரத்தை முறியடிக்க பட்னாவிஸ் தொடர்ந்து பதவியில் நீடிப்பது அவசியம்” என்று தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களை சந்தித்து பேசிய பிறகு பட்னாவிஸ் டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் தோல்விக்கான காரணம் குறித்து எடுத்துக் கூறினார். கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்றும், ராஜ் தாக்கரேயின் ஆதரவை பெற்றது, ஜல்காவில் சரத் பவார் கட்சியை சேர்ந்த ஏக்நாத் கட்சேயின் ஆதரவை பெற்றது தோல்விக்கு காரணம் என்றும், பா.ஜ.க செயலாளர் வினோத் தாவ்டே அடிக்கடி வேட்பாளர்களை மாற்றியது போன்றவையும் தோல்விக்கு காரணம் என்று எடுத்துக் கூறினார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தனக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மகனுக்கு அமைச்சர் பதவியா?

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 7 பேர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். உத்தவ் தாக்கரே போன்று ஏக்நாத் ஷிண்டேயும் தனது மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே 3வது முறையாக கல்யான் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் ஷிண்டே தனது மகனுக்கு அமைச்சர் பதவி கேட்க மாட்டார் என்று சிவசேனா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 2 அமைச்சர் பதவி சிவசேனாவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பதவிக்கு ஸ்ரீரங்க் பர்னே மற்றும் பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோரை ஷிண்டே பரிந்துரைப்பார் என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்துள்ளார். அமைச்சர்களை கேட்பதில் எதையும் கேட்டு பிடிவாதம் பிடிப்பதில்லை என்று ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb