திமுக: சரிந்த வாக்குகள்; அறிவாலயத்தின் அருப்புக்கோட்டை விசாரணை!

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள், திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விருதுநகரில் களமிறங்கினார். தொகுதியில் அவரை வெற்றிப்பெற வைக்க வேண்டிய பொறுப்பு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வசம் ஒப்படைக்கப்பட்டது. தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் அவர்தான் பொறுப்பாளர் என்பதால், தன் வயதுக்கும் மீறி சுற்றிச் சுழன்றார் அமைச்சர். ஆனால், தனது சொந்தத் தொகுதியான அருப்புக்கோட்டை தொகுதியிலேயே, மாணிக்கம் தாகூருக்கு குறைவான வாக்குகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பெற்றுத் தந்திருப்பது அறிவாலய சீனியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், “விருதுநகர் மாவட்டத்திற்கு, கே.கே.எஸ்.எஸ்.ஆரும் தங்கம் தென்னரசுவும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால், மக்களவை எல்லையின்படி பார்த்தால், தங்கம் தென்னரசுவின் சொந்தத் தொகுதியான திருச்சூழி தொகுதி, இராமநாதபரம் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. ஆனாலும், விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் என்கிற அடிப்படையில், அமைப்புரீதியாகத் தன்னுடைய எல்லைக்குள் வரும் சிவகாசி, விருதுநகர் சட்டமன்றத் தொகுதிகளில் கவனம் செலுத்தினார் தங்கம் தென்னரசு. விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும் சீனியர் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதுதான், மாணிக்கம் தாகூரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வைக்க முழுப் பொறுப்பும் விழுந்தது. அவரும் ஓடியாடித்தான் வேலைப் பார்த்தார். ஆனால், சொந்தத் தொகுதியிலேயே சறுக்கிவிட்டார்.

நடந்து முடிந்த தேர்தலில், சட்டமன்றத் தொகுதிவாரியாக மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்குகள் விவரம் சமீபத்தில் வெளியானது. அதில், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் பதிவான 1,53,477 வாக்குகளில், 49,381 வாக்குகளே பெற்றிருக்கிறார் மாணிக்கம் தாகூர். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, அருப்புக்கோட்டையில் 91,040 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். அதனோடு ஒப்பிடுகையில், இந்தமுறை அருப்புக்கோட்டையில் சுமார் 41,000 வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார் மாணிக்கம் தாகூர். தன்னுடைய வெற்றிக்காக காட்டிய முனைப்பை, மாணிக்கம் தாகூரின் வெற்றிக்காக அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் காட்டவில்லை என்கிற முணுமுணுப்பு கட்சிக்குள் எழுந்திருக்கிறது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வரும் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருக்கின்றன. ஆனால், அருப்புக்கோட்டையில் சறுக்கிய அளவுக்கு குறையவில்லை. ‘அமைச்சராக இருந்துகொண்டு, தன்னுடைய தொகுதியில் கோட்டைவிட்டுவிட்டாரே…’ என்கிற வருத்தம்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது சீனியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் 6-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்களும் தொகுதிப் பொறுப்பாளர்களும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, தென்காசியில் வென்ற ராணி ஶ்ரீகுமாருடன் முதல்வரைச் சந்தித்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். அவரிடம் கட்சி சீனியர்கள் பலரும் பெரிதாக முகம் கொடுத்துப் பேசவில்லை. முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றுவிட்டுப் புறப்பட்டுவிட்டார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

அருப்புக்கோட்டையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சறுக்கியதுபோல, எந்தெந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களெல்லாம் தங்கள் தொகுதியில் சறுக்கியிருக்கிறார்கள் என்கிற விவரங்களை எடுக்கத் தொடங்கிவிட்டது அறிவாலயம். அந்த ரிப்போர்ட், விரைவிலேயே முதல்வரின் பார்வைக்குச் செல்லவிருக்கிறது. சொந்தத் தொகுதியிலேயே கோட்டைவிட்டவர்களுக்கு விரைவிலேயே மண்டகப்படி நடக்கலாம்” என்றனர் விரிவாகவே.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb