Kangana: `டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் என் அம்மாவும் இருந்தார்’- கங்கனாவைத் தாக்கிய CISF காவலர்!

இமாச்சல் பிரதேசத்தின் மாண்டி தொகுதி பா.ஜ.க-வின் புதிய எம்.பி ரனாவத் , நேற்று மாலை சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் அவரை சோதித்தார். பின்னர் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் கங்கனாவை குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத கங்கனா நிலைகுலைந்து போனார்.

கங்கனா ரனாவத்

மற்ற பாதுகாவலர்கள் கங்கனாவை சூழ்ந்து கொண்டு அவரை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். கங்கனா மத்திய தொழில் பாதுகாப்புபடை அதிகாரிகளுடன் இது குறித்து பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், கங்கனாவைத் தாக்கிய மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர்,“ டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்துகொண்டிருந்தபோது அதில் எனது அம்மாவும் இருந்தார்.

அப்போது இந்த கங்கனா ரனாவத் `போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் 100 ரூபாய்க்காக அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள்’ எனக் கூறி, தொடர்ந்து விவசாயிகளை அவமரியாதை செய்துவந்தார். அதற்காகதான் நான் அவரை அடித்தேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று விவசாய சட்டங்களை எதித்து 2020-ம் ஆண்டு டெல்லியில் விவசாயிகள் போராடி வந்தனர். அந்த போராட்டத்தின்போது, கங்கனா ரனாவத் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தார்.

கங்கனா மற்றும் குல்விந்தர் கவுர்

அப்போது அளித்த ஒரு பேட்டியில், “டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளல்ல, அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அதனால்தான் யாரும் அதைப் பற்றி பேசவில்லை. இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய இந்த நாட்டை சீனா கைப்பற்றி, இதை சீனாவின் காலனியாக மாற்ற முடியும். அவர்களைப்போல நாங்கள் எங்கள் நாட்டை விற்கவில்லை.” எனக் காட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “கங்கனா ரனாவத் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர், அத்துமீறியிருப்பது வருத்தமளிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, கைதும் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb