`மாநில அரசுமீது அதிருப்தி இருந்தும், அதை எங்களால் வெற்றியாக மாற்றமுடியவில்லை!’ – வானதி `வருத்தம்’

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க போட்டியிட்ட 40 தொகுதிகளில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 13 தொகுதிகளில் டெபாசிட் இழந்து பெரும் தோல்வியை கண்டிருக்கிறது. கோவையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில், பா.ஜ.க-வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

வானதி சீனிவாசன்

அப்போது பேசிய அவர், “கோவை மக்களின் முடிவு வருத்தமளிக்கிறது. என்றாலும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றும் மனப்பக்குவத்தை பா.ஜ.க எங்களுக்கு பயிற்றுவித்திருக்கிறது. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்ததும், கோவை பகுதிக்கு நாங்கள் என்னவெல்லாம் வாக்களித்தோமோ அது அத்தனையும் நிறைவேற்றுவோம். மூன்றாவது முறையாக ஒரு வரலாற்று சாதனையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார். தொடர்ச்சியாக ஆட்சி செய்வது என்பது மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் சவாலான விஷயம்.

அந்தச் சாதனையைப் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. தேர்தல் முடிவு கருத்துக்கணிப்பு மூலம் பா.ஜ.க மோசடி செய்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். இது மட்டுமல்ல தேர்தல் பிரசாரத்திலும் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள், இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்பது போன்ற பல பொய்களை காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறிதான் ஜனநாயக நாட்டில் பிரதமர் தலைமையில் ஆட்சியமைக்கிறோம்.

வானதி சீனிவாசன்

தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட கூட்டணி சார்பாக வாக்குகள் சென்றிருக்கின்றன. மாநில அரசின்மீது மக்களுக்கு அதிகமான அதிருப்தி இருந்தாலும் கூட அதை வெற்றியாக மாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க தலைமை ஆலோசனைக் கூட்டம் நடத்துவது இயல்பு. அதைதான் கட்சி அறிவித்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb