வெ(ற்)றிக் கொண்டாட்டம்; வெட்டப்பட்ட ஆடுகள்… முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இதுதானா உங்கள் முற்போக்கு?

இந்தத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு நடுவே நடந்திருக்கும் ஒரு கொடுமை… கொதிக்க வைக்கிறது. அதிலும் அந்த வீடியோபலரையும் அதிர வைத்திருக்கிறது… பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. கூடவே, குழந்தைகளையும் நிற்க வைத்துக் கொண்டு அவர்கள் நடத்தியிருக்கும் கொடுமை… உச்சபட்ச கொடுமை!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விவசாயம் செய்கிறார்… ஆடு வளர்க்கிறார் தன் சொந்த ஊரில். அதனால், அவரை ‘ஆடு அண்ணாமலை’ என்று சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினரும் எதிரிகளும் விமர்சித்து வந்தார்கள். அதைப் பற்றியெல்லாம் அவரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

அண்ணாமலை

இந்நிலையில், நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் கோயம்புத்தூர் பா.ஜ.க வேட்பாளரான அண்ணாமலை, தி.மு.க-விடம் தோல்வி அடைந்திருக்கிறார். எப்போதுமே அண்ணாமலையின் பேச்சு… வீராவேசம்தான். வாயைத் திறந்தாலே சவால்தான். அது இந்தத் தேர்தலில் இன்னும் கூடுதலாகிவிட்டது. காரணம்… அவர் தலைமையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் தலையாயக் கட்சியாக பா.ஜ.க களமிறங்கியதுதான்.

இதையடுத்து, அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வுக்கு எதிராக கடுமையாகப் பேசினார் அண்ணாமலை. தி.மு.க-வுக்கு டெபாசிட் தேறாது என்று ஒரேயடியாகச் சவால் விட்டார். அவர் மட்டுமல்ல… அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களுமேதான் தேர்தல் பிரசாரத்தில் இஷ்டம்போல வாயைத் திறந்தார்கள். பரஸ்பரம் வெறுப்பை உமிழ்ந்தார்கள்.

சொல்லப்போனால், தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வில் இருக்கும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பலருடைய நாராசப் பேச்சுக்கு… அண்ணாமலையில் பேச்சு எவ்வளவோ மேல். ஆனால், சமூக ஊடகங்களின் பார்வை எப்போதுமே அண்ணாமலை மீதே படிந்திருப்பதால்… அவர் பேசுவது எல்லாமே பரபரப்பாகிவிடுகிறது… பற்றிக் கொள்கிறது… பதிலடி பெறுகிறது.

நாற்பது தொகுதியிலும் வெல்வோம்… என்று சொன்ன அண்ணாமலையால்கூட வெற்றிபெற முடியவில்லை. மொத்தமாக பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்தது பூஜ்யமே. பா.ஜ.க-வுக்கு செல்வாக்கான பகுதி என்று பேசப்படும் கோயம்புத்தூரிலேயே தோற்றிருக்கிறார் அண்ணாமலை. அதிலும், ‘அண்ணாமலையின் வெற்றியை எளிதாக்க வேண்டும் என்று அ.தி.மு.க தரப்பிலிருந்து வீக்கான வேட்பாளர் கோயம்புத்தூரில் நிறுத்தப்பட்டார்’ என்கிற பேச்சுக்கள் இருந்த நிலையிலும், தோற்றுப்போயிருக்கிறார்.

அண்ணாமலையின் தோல்வியைக் கொண்டாடுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது… அவர் மற்றும் அவர் சார்ந்த கட்சியினரைத் தவிர. ஆனால், கொண்டாட்டப்பட்ட விதம்… கோபத்தை மட்டுமல்ல, கொந்தளிக்கவும் வைக்கிறது.

வெட்டப்பட்ட ஆடுகள்

அண்ணாமலையின் தோல்வியைக் கொண்டாடுகிறேன் என்கிற பெயரில் நடுரோட்டில் திமுகவினரும் மற்றும் சிலரும் ஆங்காங்கே ஆடுகளை துள்ளத் துடிக்க தலையை வெட்டியிருக்கிறார்கள். கூடவே, ‘அண்ணாமலை… அண்ணாமலை’ என்கிற வெறிக்கூச்சல் வேறு. ஒரு வீடியோ… குழந்தைகள் புடைசூழ ஆட்டின் தலை ஒரே துண்டாக வெட்டப்படுகிறது. தலை உருண்டோடும்போது குழந்தைகளும்கூட ‘அண்ணாமலை’ என்று கூச்சலிடுகிறார்கள்.

ஆடு வெட்டுவது என்பது இங்கே குற்றமல்ல. ஆனால், அதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. பர்த்டே கேக் வெட்டும்போது… சிறிய கத்தியால் வெட்டினால் என்ன… பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற பெரிய ஆயுதங்களால் வெட்டினால் என்ன? ஆனால், பட்டாக்கத்தி… வீச்சரிவாள் என்று ஏந்திக் கொண்டு கேக் வெட்டினால்… சட்டம் தன் கடமையைச் செய்கிறது. அதாவது, அப்படி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்களை… அதிலும் நான்கு சுவற்றுக்குள் கொண்டாடுபவர்களைக்கூட… வீடியோ வைரலானதும் வழக்குப்போட்டு தூக்கி உள்ளேபோடுகிறது காவல்துறை.

இப்படி பட்டாக்கத்தி, வீச்சரிவாள் பயன்படுத்தி வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்றுகூட தெரியவில்லை. ஆனால், ஆடு வெட்டுவதற்கென்று சட்டதிட்டங்கள் உள்ளன. லைசென்ஸ் பெற்று அதற்கென உரிய இடத்தில்தான் வெட்டவேண்டும். கோயில் திருவிழாக்களில் பலியிடுவது தனி. அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், இப்படி நட்டநடுரோட்டில்… ஒரு கட்சியின் தலைவரான அண்ணாமலையின் தோல்வியைக் கொண்டாடுகிறேன் என்கிற பெயரில் ஆட்டின் தலையை வெட்டியிருப்பது… அநாகரீகத்திலும் அநாகரீகம். அதிலும் அதை வீடியோ எடுத்து வைரலாக்கியிருப்பது… கேவலத்திலும் கேவலம். சொல்லப்போனால் இது விதிமீறலே!

வெட்டப்பட்ட ஆடு

இதில் ஆடுகளை வெட்டி பலியிட்டதைவிடக் கொடுமை… இதற்கு எதிராக எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும்… அண்ணாமலையை தவிர கண்டனம் தெரிவிக்கவில்லை. இப்படி ஆடுகளின் தலை வெட்டவெளியில் வெட்டப்பட்டிருப்பது… மோசமான, கேவலமானதொரு முன்னுதாரணம்.

முற்போக்குக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திராவிட மாடல் அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க-வுக்கு இது அழகா? அதற்குத் தலைவராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் உட்கார்ந்திருக்கும் மு.க.ஸ்டாலின் இதையெல்லம் ரசித்துக் கொண்டிருப்பது எந்த அளவுக்கு சரி. மற்ற அரசியல்கட்சித் தலைவர்களைக்கூட விட்டுவிடலாம். ஆனால், தமிழகத்தையே ஆளும் முதல்வராக இருந்து கொண்டு, இதற்கு எதிராக வாயையே திறக்காமலிருப்பது என்ன வகை மனநிலை?

குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு, ஆடுகளின் தலைகளை வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள் முற்போக்கு பேசும் உங்கள் கட்சியின் தொண்டரடிப்பொடிகள். ஆடுதானே… ஊர்தோறும்தான் விடிந்தால், பொழுதுபோனால் வெட்டுகிறார்கள் என்று இதை வெறுமனே கடந்துவிட முடியாது. அதிலும் முதலமைச்சராக உங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது.

தமிழர்களை இன்னும் திடமானவர்களாக… திறமையானவர்களாக வளர்த்தெடுக்கப் போகிறேன் என்று மேடைக்கு மேடை பேசும் நீங்கள், இப்படி குழந்தைகளின் மனதிலும் வன்மத்தை வளர்த்தெடுக்கும் வகையில் உங்கள் கட்சியினர் நடத்திய கோரத் தாண்டவத்தைக் கண்டும்காணாமல் இருப்பது…. மகாகேவலமே!

வெட்டப்பட்ட ஆடு

இப்படியெல்லாம் நடக்கிறது என்று கேள்விப்பட்டதுமே… சட்டப்படி நடவடிக்கை எடுக்க உடனடியாக உத்தரவிட்டிருக்க வேண்டாமா? சரி, நாற்பதும் நமதே என்று நாளெல்லாம் வெற்றிக் கொண்டாடத்தில் மூழ்கிவிட்டீர்கள்… டெல்லிக்குப் போய் கொண்டாடித் தீர்த்தீர்கள்… அந்தக் குஷியில் மறந்துவிட்டீர்கள் என்றுகூட வைத்துக் கொள்வோம். ஆனால், உங்களைச் சுற்றித்தான் எழுதுவதற்கும், போஸ்ட் போடுவதற்கும் அட்மின் என பெருங்கூட்டத்தையே ஆங்காங்கே அலுவலகங்கள் போட்டு உட்கார வைத்திருக்கிறீர்களே… வேண்டாம்… இதற்கெனவே அரசாங்க சம்பளத்தில் ஆயிரத்தெட்டு செய்தித் துறை ஊழியர்கள் இருக்கிறார்களே… ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலே போதுமே. டிஜிபி-க்கு ஒரேயொரு போன்… உங்கள் பிஏ-விடமிருந்து போயிருந்தாலே போதுமே!

வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது ஆட்டின் தலை அல்ல… அரசியல் நாகரிகத்தின் தலை!

-லெவின்.