நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர், தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க-அ.தி.மு.க. கூட்டணி சார்பில் விஜய பிரபாகரன், பா.ஜ.க சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் பிரதான கட்சி வேட்பாளர்களாக போட்டியிட்டனர். ஸ்டார் வேட்பாளர்களின் முற்றுகையால் விருதுநகர் தொகுதி தமிழகத்தின் முக்கிய தொகுதியாக கவனம்பெற்றது.

தேர்தல் பிரசாரங்களிலும்கூட காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ஜ.க இடையே அனல் பறந்தது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மறைவையொட்டி நடைபெறும் முதல் தேர்தல் என்பதாலும், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரடியாக விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியதாலும் விருதுநகர் தொகுதியை வெல்லும் முனைப்பில் அ.தி.மு.க, தே.மு.தி.க-வினர் தீவிர களப்பணியாற்றினர். பிரசாரத்தின் கடைசி 3 நாள்களில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதுநகரில் முகாமிட்டு விஜய பிரபாகரனுக்காக பிரசாரம் மேற்கொண்டது தேர்தல் களத்தை இன்னும் அனல் பற்ற வைத்தது. எனவே, தமிழகத்தின் மற்ற தொகுதிகளை காட்டிலும் விருதுநகரில் தேர்தல் போட்டி கடுமையாகவே இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்தநிலையில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையமான விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

பிரசாரம்

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளான நேற்று முன்தினம், காலை 8 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தார். ஆனால் முதல்சுற்று முடிவில் தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன், 187 வாக்குகள் கூடுதலாக பெற்று முதன்முறையாக முன்னிலைக்கு வந்தார். தொடர்ந்து 7 சுற்றுகள் முடிவு வரை தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகன், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதற்கடுத்து 8-வது சுற்றின் முடிவில் 348 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை பெற்றார்.

விஜய பிரபாகரன்

இந்த நிலையில், 10-வது சுற்றில் தே.மு.தி.க வசமானது. 194 வாக்குகள் கூடுதல் பெற்று விஜய பிரபாகரன் முன்னிலைக்கு வந்தார். பின்னர் 11-வது சுற்றில் 563 வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் ஏறுமுகமானார். மொத்தம் 24 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு, நொடி காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க என இரண்டு கட்சி வேட்பாளர்களுமே மாறி, மாறி முன்னிலைக்கு வந்து எதிர்பார்ப்பை எகிறவைத்தனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் இரவு 8.15 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் 4,633 வாக்குகள் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை பெற்றிருந்தார். வெற்றி, தோல்வியை முடிவு செய்யக்கூடிய தபால் வாக்குகள் இதன் பிறகே எண்ணப்பட்டன. மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு 12.45 வரை நீடித்தது.

தபால் வாக்குகளில், தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனே ஆதிக்கம் செலுத்திய நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார். மொத்தம் 10,214 தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டதில், விஜய பிரபாகரன் 2634, மாணிக்கம் தாகூர் 2380, பா.ஜ.க.வேட்பாளர் ராதிகா 2122, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசிக் பாண்டியன் 909 வாக்குகளும் பெற்றிருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி, மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) – 3,85,256, விஜய பிரபாகரன் (தேமுதிக) – 3,80,877, ராதிகா சரத்குமார் (பாஜக) – 1,66,271, கௌசிக் பாண்டியன் (நா.த.க) – 77,031 வாக்குகள் பெற்றனர். தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன், தேர்தலில் வெற்றிபெற்றதற்கான தற்கால சான்றிதழை காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு வழங்கினார்.

ராதிகா

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் (5,72,155 வாக்குகள்) பெற்றார். அதுபோல, தமிழகத்திலேயே மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெயரை விருதுநகரில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் (4,379 வாக்குகள்) பெற்றிருக்கிறார்‌.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.