“நான் டெபாசிட் தொகையைத் தவிர, வேறு விசயங்களுக்காக எந்த செலவையும் செல்லவில்லை. நேர்மையாக தேர்தலில் போட்டியிடுபவர்களை இந்த தொகுதி மக்கள் மதிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல், என் நம்பிக்கை வீண் போகவில்லை. திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்கள் எனக்கு 14,896 வாக்குகளை செலுத்தி, என்னை நெகிழச் செய்திருக்கிறார்கள்” என்று உற்சாகமாக பேசுகிறார், திருச்சி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட செல்வராஜ்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ 5,38,408 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை 2,27,326 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா பிடித்தார். அதேபோல், மூன்றாவது இடத்தை 1,06,676 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ‘ஜல்லிக்கட்டு’ ராஜேஷூம், நான்காவது இடத்தை 99,453 வாக்குகளுடன் அ.ம.மு.க வேட்பாளர் செந்தில்நாதனும் பெற்றனர்.
இந்நிலையில் தான், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சின்னப்பா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்ற டிப்ளமோ படித்த இளைஞர் பிஸ்கட் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். டெபாசிட் தொகையைத் தவிர வேறு எந்த ஒரு செலவும் செய்யாமலும், பிரசாரத்திலும் ஈடுபடாமலும் 14,896 வாக்குகள் பெற்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இது குறித்து, இளைஞர் செல்வராஜிடம்பேசிய போது,
“புதுக்கோட்டை தொகுதி முன்பு தனித்தொகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறுசீரமைப்பின் போது இந்த தொகுதி நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்டெடுப்பதற்காகவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். இந்த தேர்தலில் நிற்பதன் மூலம் அதுகுறித்த அழுத்தத்தை பலருக்கும் கொடுக்க நினைத்தேன். இதனால், நடந்து முடிந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன்.
அதேநேரம், இந்த தேர்தலுக்காக நேரில் சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்தோ பிரசாரம் செய்தோ வாக்கு சேகரிக்கவில்லை. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொலைபேசியில் வாயிலாக மட்டுமே தொடர்பு கொண்டு எனக்கு வாக்களிக்கும்படி பேசினேன். பிஸ்கட் சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், இறுதியாக இருந்த பிஸ்கட் சின்னத்தை நான் தேர்ந்தெடுத்தேன். அனைவருக்கும் பரிச்சயமாக இருக்கும் என்ற நோக்கத்தில் பிஸ்கட் சின்னத்தை தேர்ந்தெடுத்து போட்டியிட்டேன். எனக்கு திருச்சி தொகுதி மக்கள் 14,896 வாக்குகளை அளித்துள்ளனர். அடுத்த முறையும் போட்டியிடுவேன். புதுக்கோட்டை தொகுதியை கண்டிப்பாக மீட்டெடுக்கும் வரை நான் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிஸ்கட் சின்னத்தில் போட்டியிட்ட இளைஞர் 14,896 வாக்குகள் பெற்றது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையாக அவருக்கு விழுந்த வாக்குகளா என்று சமூகவலைதளங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுபற்றி பேசும் சிலர், “தீப்பெட்டி சின்னமும், பிஸ்கட் சின்னமும் பார்ப்பதற்கு சற்று ஒரே மாதிரியான கோணத்தில் இருந்ததால் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்கச் சென்றவர்கள் மாற்றி பிஸ்கட் சின்னத்திற்கு தவறுதலாக வாக்குகளை செலுத்தி இருக்கலாம் என்கிறார்கள். கிராமத்தில் நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாயும் என்று சொல்வார்கள். அதுபோலதான், துரை வைகோவுக்கு விழ வேண்டிய ஓட்டுகள் தவறுதலாக இந்த இளைஞருக்கு விழுந்திருக்க வேண்டும். காரணம், தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டாரே தவிர, அவர் பிரசாரமே மேற்கொள்ளவில்லை. அப்புறம் எப்படி, அவருக்கு ஓட்டுகள் விழ வாய்ப்புள்ளது?” என்றார்கள்.
இருப்பினும், எந்த செலவும் செய்யாமல் டெபாசிட் தொகையை மட்டும் கட்டிவிட்டு பிரசாரத்திலும் ஈடுபடாமல் 14,896 வாக்குகளை பெற்ற இளைஞர் செல்வராஜ், இனம் புரியாத மகிழ்ச்சியில், ‘இறகைப்போலே அலைகிறேனே…’என்று மகிழ்ச்சி கானம் பாடி வருகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88