வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலா? – வேட்பாளர் குறித்து கேரள காங்கிரஸில் எழுந்த விவாதம்!

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்த நிலையில், வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.பி-யாக பணி செய்து வந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸின் பாரம்பர்ய தொகுதியான ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலுமே ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். வயநாடு தொகுதியில் இந்தமுறை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். 2 தொகுதிகளில் வென்ற நிலையில் ஒரு எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பாரம்பர்ய தொகுதி என்ற அடிப்படையில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கே.முரளீதரன்

வயநாடு தொகுதியில் ராகுல் ராஜினாமா செய்வாரா?

எனவே வயநாடு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற விவாதம் கேரளா மாநில காங்கிரஸில் கிளம்பியுள்ளது. திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சுரேஷ் கோபி-யிடம் தோல்வி அடைந்த கே.முரளிதரனுக்கு வயநாடு தொகுதியில் சீட்டு வழங்க வேண்டும் என்று கோழிக்கோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தனக்கு பிரசாரம் செய்ய வரவில்லை, காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் யாரும் தனக்காக தேர்தல் பணி செய்யவில்லை என்ற கோபத்தில் கே.முரளிதரன் தற்காலிகமாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார். எனவே, வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பட்சத்தில் கே.முரளிதரனுக்கு வாய்ப்பு கொடுத்து, அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமையும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் கேரள மாநில தலைவர் கே.சுதாகரன்

இது குறித்து காங்கிரஸ் கேரள மாநில தலைவர் கே சுதாகரன் கூறுகையில், “திருச்சூரில் காங்கிரஸின் தோல்வி குறித்து ஆய்வு செய்துவருகிறோம். விசாரணை முடிவில் யாராவது குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். கே.முரளீதரன் அனைத்து பதவிகளுக்கும் தகுதியானவர்தான். ஏற்கனவே மாநில தலைவராக இருந்தவர். ராஜ்யசபா எம்.பி உள்ளிட்ட பல வாய்ப்புகள் காங்கிரஸில் உள்ளது. ராகுல் காந்தி எந்த தொகுதியை ராஜினாமா செய்யப்போகிறார் என்பது தெரிந்த பிறகுதான் வயநாடு குறித்து முடிவு செய்ய முடியும். அந்த முடிவுக்கு பிறகுதான் வயநாட்டின் வேட்பாளர் குறித்து பேச முடியும்” என்றார்.