விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க-அ.தி.மு.க. கூட்டணி சார்பில் விஜய பிரபாகரன், பா.ஜ.க சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். ஸ்டார் வேட்பாளர்களின் முற்றுகையால் விருதுநகர் தொகுதி தமிழகத்தின் முக்கிய தொகுதியாக கவனம்பெற்றது. எதிர்ப்பார்த்தது போலவே அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன், தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேப்டாளர் மாணிக்கம் தாகூர் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் விருதுநகர் தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த நிலையில், இன்று தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா, “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை. கேப்டன் நினைவிலிருந்து மீளவில்லை என்பதால், விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிட மறுத்தார். நிர்வாகிகளின் அன்புக்கட்டளையை ஏற்றே விருதுநகரில் போட்டியிட்டார்.
தேர்தலில் கடைசிவரை அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. விஜய பிரபாகரன் சூழ்ச்சி செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார். அதற்கு ஆதாரம் இருக்கிறது… வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக அங்கிருக்கும் அதிகாரிகளே சொன்னார்கள்.
அங்கு ஆட்சியர், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, `பல்வேறு தரப்பிலிருந்து எனக்கு நிர்பந்தங்கள் அதிகமாக இருக்கிறது. என்னால் சமாளிக்க முடியவில்லை. அதனால் என் போனை சுவிட்ச் ஆஃப் செய்யப்போகிறேன்’ எனக் கூறி இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துகிறார். அப்படியானால், ஆட்சியரை செயல்படவிடாமல் தடுத்தது யார்? தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்பே முதல்வர் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வென்றது என்கிறார்.
முதல்வர் அறிவிக்கும் முன்னர் நான்கு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. எதனை வைத்து முன்கூட்டியே வென்றுவிட்டோம் எனக் கூறினார் என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். ஏனென்றால், விருதுநகர் தொகுதியில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல்தான் மாணிக்கம் தாகூர் அங்கு வெற்றிச் சான்றிதழை வாங்கினார். கே.டி.ராஜேந்திர பாலாஜி தவறு நடப்பதாக அங்கேயே முறையிட்டார்.
தே.மு.தி.க, அ.தி.மு.க நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கோரினர். ஆனால், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டும் தொனியில் காவல்துறைப் படையை இறக்கினர். இதனால்தான் விஜய பிரபாகாரன் தோல்வியில் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது என்கிறேன். விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். நீதிமன்றத்துக்குச் சென்றால் உடனே தீர்வு காணமுடியாது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும். அ.தி.மு.க தலைவர்கள் ஒன்றுசேர்வார்களா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறவேண்டும். அது அவர்களின் உட்கட்சி விவகாரம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb